பாரம்பரிய நடைமுறைகளை தடுக்கும் அறநிலையத்துறை

பழநி கோயில் நடைமுறையிலும், பாரம்பரிய விழாக்களிலும் இல்லாத வகையில், போகர் ஜெயந்தி விழா நடத்த முயற்சி நடக்கிறது, அதை நடத்த கூடாது என கோயில் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், ஸ்ரீமத் போகர் ஆதீனம் சிவானந்த புலிப்பாணி பாத்திர சுவாமிகள் பழநியில் செய்தியாளர்களிடம் பேசுகையில், “பழநி முருகன் கோயில் மூலவர் சிலையை செய்த போகர் சித்தருக்கு, கோயிலில் விழா நடத்த கோயில் நிர்வாகம் அனுமதி மறுத்துள்ளது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக பழநி கோயில் நிர்வாகம், பாரம்பரிய நடைமுறைகளில் தொடர்ந்து தலையிடுவது வேதனையளிக்கிறது. இதுகுறித்து கோட்டாட்சியரிடம் மனு அளிக்க உள்ளோம். திட்டமிட்டபடி மே 18ல் போகர் ஜெயந்தி விழா நடக்கும்” என்றார்.கடந்த ஆண்டு நடைபெற்ற பழனி கோயில் குடமுழுக்குக்கு முந்தைய நாள், அங்கு சென்ற தி.மு.க அரசின் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, அதிகாரிகளுடன் கருவறைக்குள் நுழைந்தார் என்றும் இதனால், மீண்டும் பிராயச்சித்த கும்பாபிஷேகம் நடத்தவேண்டும் என்றும் பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் குற்றம் சாட்டியிருந்தார். மேலும், பழநி கோயில் கும்பாபிஷேகத்தின்போது இடும்பன் மலைக்கோயில் உள்ளிட்ட உபகோயில்களை புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்தப்படவில்லை, பழநி படிப்பாதைகளிலுள்ள கோயில்களும் முழுமையாகப் புதுபிக்கப்படவில்லை, கோயில் வளர உதவியர்கள், பாதுகாத்தவர்கள் அனைவரும் புறக்கணிக்கப்பட்டிருக்கின்றனர், கட்டட விரிசல்களைச் சரி செய்யவில்லை, மண்டல பூஜை நடத்தாமல் தைப்பூசத்துக்குக் கொடியேற்ற ஏற்பாடு செய்யப்பட்டது, இப்படி பல ஆகமக் குற்றங்கள் நடத்தப்பட்டுள்ளன என்ற குற்றச்சாட்டுகளும் பலரால் முன்வைக்கப்பட்டன என்பதும் இங்கு நினவு கூரத்தக்கது.