மத்திய அரசின் நுகர்வோர் பாதுகாப்புத் துறை, நுகர்வோருக்கு மிகப் பெரியளவில் உதவியாக இருக்கும் வகையில், புதிதாக ‘ரைட் டூ ரிப்பேர்’ என்பதை அறிமுகப்படுத்தியுள்ளது. பொதுவாக, நாம் புது கார் அல்லது பைக்குகளை வாங்கும் போது, ஓர் ஆண்டிற்கோ அல்லது அதன் பின்னர் குறிப்பிட்ட காலத்திற்கோ அங்கீகரிக்கப்பட்ட சேவை மையத்தில் இலவச சர்வீஸ் சேவை வழங்கப்படும். அந்த காலகட்டத்தில் குறிப்பிட்ட நாட்களுக்கு ஒரு முறை நாம் வண்டியை இலவசமாக அங்கு சர்வீஸ் செய்து கொள்ளலாம். பெரும்பாலும் இந்த காலத்தில் மட்டுமே நாம் அங்கீகரிக்கப்பட்ட சேவை மையத்திற்கு நமது வாகனத்தை எடுத்துச் சென்றிருப்போம். அதன் பிறகு பழுது ஏற்பட்டால் வெளியில் உல்ள பழுது நீக்கும் மையங்களை தான் நாடுவோம். காரணம், அங்கீகரிக்கப்பட்ட சேவை மையத்தில் சிறியளவில் பழுதானால் கூட சர்வீஸ் கட்டணம் அதிகம் செலுத்த வேண்டி இருக்கும். ஆனால், வெளியே பழுது பார்த்தால் வண்டிக்கான வாரண்டி போய்விடும் என்பதால் சிலர் சின்ன சின்ன பிரச்சினைகளுக்குக் கூட கட்டணம் அதிகம் என்றாலும் வேறு வழியின்றி அங்கீகரிக்கப்பட்ட சேவை மையத்திற்கே செல்வார்கள். ஆனால், இந்நிலை விரைவில் மாறவுள்ளது.
இதற்காக மத்திய அரசின் நுகர்வோர் பாதுகாப்புத் துறை ‘ரைட் டூ ரிப்பேர்’ என்ற ஒரு விஷயத்தை கையில் எடுத்துள்ளது. இதற்காகத் தனியாக ஒரு இணையதளமும் தொடங்கப்பட்டுவிட்டது. இதன் மூலம் அங்கீகரிக்கப்படாத இடங்களுக்குச் சென்று நாம் வாகனத்தை சர்வீஸ் செய்தால் கூட வாகனத்தின் உத்தரவாதத்தைப் பாதுகாக்க முடியும். ஹீரோ மோட்டோகார்ப் மற்றும் ஹோண்டா மோட்டார்ஸ் போன்ற சில நிறுவனங்கள் இதில் ஏற்கனவே இணைந்துவிட்டன. அங்கீகரிக்கப்பட்ட மூன்றாம் தரப்பு மெக்கானிக் விவரங்கள் இதில் இடம்பெற்றுள்ளதுடன், சிறு சிறு பழுதுகள் ஏற்பட்டால் நாமாகவே அதனை எப்படிச் சரி செய்ய வேண்டும் என்பது குறித்த தரவுகளும் இதில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் நாம் வாங்கிய ஒரு பொருளை யாரிடம், எப்படி பழுது பார்க்க வேண்டும் என்ற உரிமை நமக்கு வழங்கப்பட்டுள்ளது. இதைத்தவிர, வாகன பாகங்கள் குறித்த தகவல்களை நிறுவனங்கள் வெளியிடாது இதுநாள் வரை ரகசியம் காத்து வந்தன. ஆனால், ரைட் டூ ரிப்பேர் திட்டத்தின் கீழ் வாகனத்தின் பாகங்கள் குறித்த முழு தகவல்களையும் மூன்றாம் தரப்பு சர்வீஸ் சென்டர்களுடன் இந்நிறுவனக்கள் பகிர்ந்து கொள்ள வேண்டும்.
இதன் மூலம் வாகனத்தில் உள்ள உண்மையான பிரச்சனைகளைக் கண்டறியும் கருவிகள் மற்றும் உதிரிப் பாகங்கள் ஆகியவை அனைவரும் அணுகக்கூடியதாக மாறும். இதைத்தவிர, இந்த ‘ரைட் டூ ரிப்பேர்’ என்பது மின்னணுப் பொருட்கள், நுகர்வோர் சாதனங்கள், ஆட்டோமொபைல் உபகரணங்கள் மற்றும் விவசாய உபகரணங்கள் என நான்கு முக்கிய துறைகளை உள்ளடக்கியுள்ளது. நமது வாகனங்கள் மட்டுமின்றி, வீட்டு உபயோக சாதனங்கள், கம்பியூட்டர், அலைபேசிய் உள்ளிட்ட மின்னணு பொருட்கள் போன்றவையும் ரைட் டூ ரிப்பேர் திட்டத்தின் கீழ் பாதுகாக்கப்படும். நுகர்வோர் விவகாரத் துறை பல நிறுவனங்களையும் பல துறைகளையும் இதில் கொண்டு வர முனைப்பு காட்டுகிறது. ஆனால், இதை பல பெரு நிறுவனங்கள் எப்படி அணுகப் போகின்றன, சம்மதம் தெரிவிக்குமா? அவற்றை அரசு எப்படி சம்மதிக்க வைக்கும்? போன்ற பல கேள்விகளும் இருக்கத்தான் செய்கின்றன.