டெல்லியில், 16வது குடிமைப் பணிகள் தினத்தை முன்னிட்டு டெல்லியில் 2 நாள் நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதனை துவக்கிவைத்து பேசிய குடியரசு துணைத்தலைவர் ஜெகதீப் தன்கர், “நமது ஜனநாயகம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வளர்ந்து கொண்டிருக்கிறது. அதன் தூண்களான நாடாளுமன்றம், நீதித்துறை, நிர்வாகம் ஆகியவை ஒன்றுடன் ஒன்று இணைந்து செயல்பட வேண்டும். அதனை நாம் உறுதி செய்ய வேண்டும். ஒவ்வொன்றும் அதன் எல்லைக்குள் செயல்பட்டால் சிறப்பாக இருக்கும். பாரதம் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு. பாரதம் தான் உலக ஜனநாயகத்தின் தாய். இது கிராமம், மாவட்டம், மாநிலம், தேசம் என அனைத்து மட்டங்களிலும் சிறப்பாக செயல்படுகிறது. வேறு எந்த நாட்டின் அரசியல் சட்டத்திலும் பஞ்சாயத்துகளோ, நகராட்சிகளோ இடம்பெறவில்லை. ஆனால், நமது அரசியல் சட்டத்தின் 9வது அட்டவணையில் அவை சேர்க்கப்பட்டுள்ளன. நமது புதிய மந்திரமான தற்சார்பு பொருளாதாரத்தை அடைவதற்கு பொது நிர்வாகத்தில் முக்கிய அங்கமாக இவை இருக்கின்றன. குறைந்தபட்ச அரசு, அதிகபட்ச நிர்வாகம்; நேரடிப் பயன் பரிமாற்றம்; குடிமக்களை மையப்படுத்துதல்; வெளிப்படைத்தன்மை; மக்களுக்கு பதில் சொல்ல கடமைப்பட்டிருந்தல் போன்றவை பொதுமக்கள் சேவைக்கு உகந்த நடைமுறைகளாக உருவாகியுள்ளன. குடிமக்கள் சேவை என்ற மனநிலை சாமான்ய மக்களுக்கு சேவை வழங்குவதில் கவனம் செலுத்துகிறது. தொழில்நுட்ப ஈடுபாடு சேவை வழங்குவதை விரைவுபடுத்தியுள்ளது. இதனால் நீண்டகாலமாக இருந்த இடைத்தரகர் முறை முடிவுக்கு வந்துள்ளது. கிராமப்புற வீட்டுவசதி, சமையல் எரிவாயு, துப்புரவு, குடிநீர், மின்விநியோகம், வங்கிக் கணக்குகள் அல்லது பணம் செலுத்துவதில் டிஜிட்டல் மயம் என எந்தத்துறையாக இருந்தாலும் மிகப்பெரிய சாதனை படைக்கப்பட்டுள்ளது. சில வெளிநாட்டு பல்கலைக் கழகங்கள் உள்ளிட்ட சில அமைப்புகளிடம் இருந்து உருவாகியுள்ள ஆபத்து தற்போது இரட்டிப்பாக உயர்ந்துள்ளது. அவை நமது பண்டைய நாகரிகம், பண்பாடு, நெறிமுறைகளை அழிக்கவும், தேசத்தின் வளர்ச்சியை சீர்குலைக்கவும் முனைந்துள்ளன. அவை, தேச விரோத செயல்பாடுகளின் மையங்களாக திகழ்ந்து வருகின்றன. சிலர், நமது ஜனநாயக மற்றும் அரசியல் சட்ட அமைப்புகளுக்கு எதிராக உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் பிரசாரம் செய்து வருகிறார்கள். அவர்களின் செயல்பாடுகள் மாற வேண்டும்” என்று கூறினார்.