சூரத்தில் அணுகுண்டு வைக்க சதி

இந்தியன் முஜாஹிதீன் (ஐ.எம்) பயங்கரவாத அமைப்பின் இணை நிறுவனர் யாசின் பட்கல் மற்றும் பலர், சூரத் நகரில் அணுகுண்டு ஒன்றை கொண்டு மிகப்பெரிய பயங்கரவாதச் செயலை நிகழ்த்தவும் அதற்கு முன்னர் அந்த நகரத்திலிருந்து முஸ்லிம்கள் அனைவரையும் வெளியேற்றவும் திட்டமிட்டிருந்தனர் என்ற ஒரு திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. 2008ம் ஆண்டு டெல்லி, ஜெய்ப்பூர் மற்றும் அகமதாபாத்தில் தொடர் குண்டுவெடிப்புகள் நடந்தபோது, அதிஃப் அமீனுடன் சேர்ந்து 27 குண்டுகளை தயாரிப்பதில் பயங்கரவாதி யாசின் முக்கிய பங்கு வகித்தான். இந்தியன் முஜாகிதீன் அமைப்பின் வெடிகுண்டு நிபுணராக இருந்த யாசின் கைது செய்யப்பட்ட பிறகு அந்த அமைப்பின் வெடிகுண்டு தயாரிக்கும் திறன் பாதிக்கப்பட்டுள்ளதாக உளவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். டெல்லியில் உள்ள என்.ஐ.ஏ நீதிமன்றம், இதுகுறித்த பல்வேறு மின்னணு மற்றும் டிஜிட்டல் ஆதாரங்கள், யாசின் பட்கல் மற்றும் முகமது சாஜித் (படா சாஜித்) ஆகியோருக்கு இடையேயான உரையாடல் உள்ளிட்டவைகளை ஆய்வு செய்த பிறகு, இந்தியன் முஜாஹிதீன் (ஐஎம்) இயக்குநரான யாசின் பட்கல் மற்றும் 10 பேர் மீது உபா வழக்கில் பாரதத்திற்கு எதிராகப் போரை நடத்த பயங்கரவாத சதிகளை வடிவமைத்து செயல்படுத்தியதாக சமீபத்தில் குற்றம் சாட்டியபோது இந்தத் தகவல் தெரியவந்தது. 2013ம் ஆண்டு ஹைதராபாத் குண்டுவெடிப்பு வழக்கில் யாசின் பட்கலுக்கு ஏற்கனவே 2016ம் ஆண்டு ஹைதராபாத்தில் உள்ள என்.ஐ.ஏ நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது குறிப்பிடத்தக்கது.