ஹிந்து பட்டியல் சமூகத்தினரை வஞ்சிக்கும் தி.மு.க அரசு

இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி சுப்பிரமணியம் வெளியிட்ட அறிக்கையில், “தமிழக முதல்வர் ஸ்டாலின், தமிழக சட்டபேரவையில் கிறித்துவர்களாக மதம் மாறிய பட்டியலினத்தவர்களுக்கும் இட ஒதுக்கீடு சலுகை வழங்க சட்டத்தில் உரிய திருத்தங்களை மேற்கொள்ள மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம் தமிழக சட்டப் பேரவையில் நிறைவேற்றப்படும் என அறிவித்திருப்பதை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது. அண்ணல் அம்பேத்கர் இட ஒதுக்கீடு குறித்து தெளிவான கண்ணோட்டத்தை தந்துள்ளார். சமூக நீதிக்கான சலுகையை மதமாற தூண்டும் சதிகளுக்கு துணைபோக தமிழக முதல்வரின் இந்த நடவடிக்கை அண்ணல் அம்பேத்கரின் உயர்ந்த சிந்தனைக்கு செய்யும் துரோகம். தி.மு.க அரசு பதவியேற்றதில் இருந்து அப்பட்டமாக கிறித்துவ, முஸ்லிம்களின் ஊதுகுழலாக செயல்படுகிறது. ஹிந்துக்களுக்கு துரோகம் இழைத்து வருகிறது. கிறித்துவ கல்வி நிறுவனங்கள் மக்களின் வரி பணத்தில் நடத்தப்படுகிறது. ஆனாலும் மாநில அரசின் இட ஒதுக்கீடுகள் அமல்படுத்துவது இல்லையே ஏன்? கிறித்துவ கல்வி நிறுவனங்கள் அரசின் இட ஒதுக்கீடு கொள்கையை அமல்படுத்த மசோதா கொண்டு வருவாரா தமிழக முதல்வர்? சமூகத்தில் தாங்கள் முன்னோர்கள் பட்ட அவமானங்கள், கஷ்டங்களை ஏற்று ஹிந்துவாக தன்மானத்தோடு வாழ்ந்த பட்டியல் சமூக முன்னோர்களின் தியாகத்திற்கு தரும் சலுகையை பட்டியக் சமூகம் இழந்து விடக்கூடாது. தமிழக அரசின் தவறான போக்கை கண்டித்து போராட பட்டியல் சமூக மக்களும் அமைப்புக்களும் முன்வர இந்து முன்னணி அறைகூவல் விடுக்கிறது. சட்டரீதியாகவும், பொதுமக்களின் கருத்துக்களை திரட்டி ஜனநாயக ரீதியில் போராடியும் இந்து முன்னணி மதம்மாறிய கிறித்தவர்களுக்கு தமிழக அரசு கொண்டு வரும் மசோதாவை முறியடிக்க தயங்காது” என தெரிவித்துள்ளார்.