கிறிஸ்தவர்களாக மாறிய பட்டியல் சமூகத்தினருக்கும் சலுகை வழங்க வலியுறுத்தி தனித்தீர்மானம் கொண்டு வந்தார் தமிழக முதல்வர் ஸ்டாலின். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ.க தனது கருத்துக்களை முன்வைத்தது. ஆனால், பா.ஜ.க சார்பில் பேசிய வானதி சீனிவாசனின் உரை அவை குறிப்பில் இடம்பெறாது என அறிவிக்கப்பட்டதால் பா.ஜ.கவினர் வெளிநடப்பு செய்தனர். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த வானதி சீனிவாசன், “மதம் மாறிய பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அரசாங்கத்தின் இட ஒதுக்கீட்டு சலுகையை பெறுவது தொடர்பாக ஆராய 2022ம் ஆண்டு ஓய்வுபெற்ற கே.ஜி. பாலகிருஷ்ணன் தலைமையில் குழு அமைக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது. ‘இது அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது, அவர்களுக்கு கிடைக்க வேண்டிய சலுகைகள் கிடைக்க வேண்டும்’ என ரிட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதன் விசாரணை கடந்த வாரம் கூட நடைபெற்றது. அடுத்தகட்ட விசாரணை ஜூலை மாதத்துக்கு தள்ளிவைக்கப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டுவரும் போது, நீதிமன்ற வரம்புக்கு உள்ளான ஒரு விஷயத்தை பற்றி எதற்காக தீர்மானத்தை கொண்டு வர வேண்டும்? என்ற கேள்வியை பா.ஜ.க எழுப்பியது. மேலும், கிறிஸ்தவர்களாகவும் முஸ்லிம்களாகவும் மதம் மாறிய பின்னரும் ஜாதிக் கொடுமைகளுக்கு பட்டியல் சமூக மக்கள் ஆளாகிறார்களா? என்ற கேள்வியை முதலமைச்சரை நோக்கி எழுப்பினோம். பட்டியல் சமூக மக்களின் மேம்பாட்டுக்காக உழைக்கிறோம் என்று சொல்லும் திராவிட மாடல் அரசு, வேங்கை வயல் பிரச்சனை, பஞ்சமி நிலம் பிரச்சனை, ஆணவ கொலைகள் தடுக்க சட்டம் ஆகியவை குறித்து கவலைப்படாமல் முழுக்க முழுக்க அரசியல் நோக்கத்துக்காக இந்த தீர்மானத்தை கொண்டு வந்துள்ளார்கள். எனவே இதை எதிர்த்து நாங்கள் வெளிநடப்பு செய்துள்ளோம்” என்று கூறினார்.