ஒரு குழந்தை கூட கல்வி கற்காமல் இருக்கக் கூடாது என்பதற்காக கொண்டு வரப்பட்டதுதான் சர்வ சிக்ஷா அபியான் திட்டம். இத்திட்டம் கிராமப் புறங்களில் வசிக்கும் பலருக்கும் தெரிவதில்லை. இந்த சூழலில், பென்னலூர்பேட்டை அருகே உள்ள பழங்குடியினர் வசிக்கும் திடீர் நகர் பகுதிக்கு சமீபத்தில் சென்ற, பென்னலூர்பேட்டை காவல் உதவி ஆய்வாளர் பரமசிவம், கல்வியின் முக்கியத்துவம் குறித்து அப்பகுதி மக்களிடம் தெளிவாக எடுத்துக்கூறி விழிப்புணர்வை ஏற்படுத்தினார். மேலும் மாணவ்ர்களுக்கு பள்ளியில் தினமும் 3 வேலை சாப்பாடு, வாரத்தில் 5 நாட்கள் முட்டை, 2 நாட்கள் பயறு வழங்கப்படுகிறது என்று மத்திய மாநில அரசுகளின் திட்டங்களை எடுத்துக் கூறியதுடன் கிராமத்தில் இருக்கும் குழந்தைகளை எப்படியாவது படிக்க வைத்துவிட வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில், அக்குழந்தைகளின் பெற்றோரிகளிடம் வேண்டுகோள் விடுத்தார். மேலும், “குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாத பெற்றோர் குற்றவாளி. குழந்தைகள் விஷயத்தில் நான் விடமாட்டேன். குழந்தைகளுக்கு கல்வி தர மறுப்பது, அவர்களுக்கு விஷம் கொடுப்பது மாதிரி, சமுதாயத்தை கருவறுப்பது மாதிரி. இதுபோன்ற தவறான மூட நம்பிக்கையில் மாட்டிக்கொள்ள வேண்டாம். யாருக்காக உதவி தேவைப்பட்டால் என்னை காவல் நிலையத்தில் பார்க்கலாம். பள்ளி கட்டணம், சாப்பாடு என எந்த உதவிக்கும் என்னை அணுகலாம். கையெடுத்துக் கேட்கிறேன். தயவு செய்து குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புங்கள். குழந்தைகள் படிக்க, யார் காலில் விழுந்தாவது உதவி செய்கிறேன்” என பேசியுள்ளார். இது தொடர்பான காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதைக் கண்ட பலரும் அந்த காவலருக்கு தங்களது பாராட்டுக்களையும், வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.