ஏப்ரல் 2ம் தேதி, கேரளா மாநிலத்தின் ஆலப்புழாவில் இருந்து கண்ணூருக்கு வந்த ரயிலில் பயணித்த 3 பயணிகள், சக பயணி ஒருவரால் பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர். இச்சம்பவத்தில் ஈடுபட்ட டெல்லி ஷாஹீன் பாக்கைச் சேர்ந்த ஷாரூக் ஷபி என்ற முஸ்லிம் பயங்கரவாதி, மகாராஷ்டிராவில் பதுங்கியிருந்தான். அவனை, மத்திய உளவுத்துறை அதிகாரிகள் மற்றும்மகாராஷ்டிர பயங்கரவாத தடுப்புப் படையினர் உதவியுடன் கடந்த 4ம் தேதி கேரள காவல்துறையினர் கைது செய்தனர். ஷாரூக் ஷபியிடம் நடத்தப்பட்டு வரும் விசாரணையின் ஒருபகுதியாக அவனை பாலக்காடு மாவட்டம், ஓங்கல்லூர், பட்டாம்பி, கரக்காடு காலனி ஆகிய இடங்களுக்கு புலனாய்வு அமைப்புகள் அழைத்துச் சென்று விசாரித்தன. டெல்லியில் இருந்து வந்த பிறகு அங்கு அவன் 16 மணி நேரம் செலவழித்துள்ளான். அதன் பிறகே அவன் தனது பயங்கரவாத நடவடிக்கைகளை தொடங்கினான். இதற்கிடையில் அவன் செலவழித்த அந்த 16 மணி நேரம் குறித்து ஒரு கேள்வி எழுந்துள்ளது. அவன் அப்போது யாரை எல்லாம் சந்தித்தான், யார் அவனுக்கு உதவினர் என பல கேள்விகள் எழுந்துள்ளன.
அந்த இடம், சட்டவிரோதமான அமைப்பாக அறிவிக்கப்பட்ட பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவின் (பி.எப்.ஐ) அமைப்பின் அரசியல் பிரிவான சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியாவின் (எஸ்.டி.பி.ஐ) உறுப்பினரால் பிரதிநிதித்துவப்படுத்தப்படும் பஞ்சாயத்து வார்டுக்கு சொந்தமானது என்று கூறப்படுகிறது. தற்செயலாக, அந்த வார்டின் எஸ்.டி.பி.ஐ உறுப்பினர்கள் சிலர் இந்த பயங்கரவாதச் செயலுக்குப் பிறகு தலைமறைவாகியதாகவும் கூறப்படுகிறது. மேலும், ஷாரூக் ஷபி ரயில் நிலையத்தில் இருந்து சுமார் 3 கி.மீ தொலைவில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் பெட்ரோல் வாங்கியுள்ளான். ஆனால், ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள எரிபொருள் நிரப்பும் நிலையத்தை ஏன் தவிர்த்தான் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இதனால், இதுகுறித்து ஆராய புலனாய்வு அமைப்புகள் அந்த பெட்ரோல் நிலையத்தையும் ஆய்வு செய்து வருகின்றன. இதனிடையே, பயங்கரவாதி ஷாரூக் ஷபிக்கும், கோவை கார் குண்டு வெடிப்பில் ஈடுபட்ட ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதியான ஜமேஷா முபின்பு மற்றும் இந்த வழக்கில் கைதான மற்ற பயங்கரவாதிகளும் அவர்களது ஆதரவாளர்களுக்கும் தொடர்பு உள்ளதா, ஒன்றாக சந்தித்து சதித் திட்டம் தீட்டி செயல்பட்டார்களா என கோவை மாநகர காவல்துறையினர் தனியாக விசாரித்து வருகின்றனர்.