அதானி குழுமம் குறிவைக்கப்படுகிறது

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (என்சிபி) தலைவர் சரத் பவார், “சர்வதேச அளவில் அதானி குழுமம் குறிவைக்கப் பட்டிருப்பதாக தெரிகிறது. இந்த விவகாரத்துக்குப் பின்னால் இருப்பவர்கள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும். அவர்களது பின்புலங்களை ஆராய வேண்டும். இந்த விவகாரத்தால் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படுகிறது. கார்ப்பரேட் நிறுவனங்களால் தான் நாடு வளர்ச்சிப் பாதையில் பயணிக்கிறது. நாட்டின் பெட்ரோ கெமிக்கல் துறை வளர்ச்சியில் அம்பானியும் மின் துறை வளர்ச்சியில் அதானியும் மிக முக்கியப்பங்கு வகிக்கின்றனர். இந்த வளர்ச்சியெல்லாம் தேசத்துக்கு தேவையில்லையா? அவர்கள் தவறு செய்திருந்தால், அவர்களை விமர்சிக்கலாம். ஆனால், அவர்கள் நாட்டின் வளர்ச்சிக்காக உழைக்கிறார்கள். அரசை விமர்சிக்க வேண்டும் என்பதற்காக தனி நிறுவனங்கள் மீது குறி வைக்கப்படுவதாக தோன்றுகிறது. ஹிண்டன்பர்க் அறிக்கை குறித்து நாடாளுமன்றக் கூட்டுக் குழு விசாரிப்பதில் எந்தப் பலனும் இல்லை. ஏனெனில், இந்தக் கோரிக்கைகள் உண்மையில் ஆளும் அரசுக்கு எதிரானது. நாடாளுமன்றக் கூட்டுக்குழுவின் விசாரணை, ஆளும் அரசின் கண்காணிப்பின் கீழ் நிகழும். அப்படி இருக்கையில் இவ்விவகாரத்தில் உண்மை வெளியே வராது. இதனால், இந்த விவகாரத்தில் நாடாளுமன்றக் கூட்டுக் குழுவின் விசாரணையைக் கோருவது அர்த்தமற்றது” தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியுடன் தேசியவாத காங்கிரஸ் கட்சி கூட்டணியில் இருக்கும் சூழலில், சமீப காலமாக, சரத் பவார் காங்கிரஸுக்கு எதிராக தொடர்ந்து கருத்துகளை தெரிவித்து வருகிவது காங்கிரஸ் கட்சித் தலைமையை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.