குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, குடியரசுத் தலைவர் மாளிகையில், 2023ம் ஆண்டுக்கான பத்ம விருதுகளை வழங்கினார். அவர்களில் ஒருவர் கர்நாடகாவின் பத்மஸ்ரீ விருது பெற்ற பித்ரி வேரின் கைவினைக் கலைஞரான ஷா ரஷீத் அகமது குவாத்ரி. இதுகுறித்து பிரதமர் மோடிக்கு, ஷா ரஷீத் அகமது குவாத்ரி நன்றி தெரிவித்த வீடியோ, தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பத்ம விருது பெற்றவர்களைச் சந்திக்க பிரதமர் மோடி வந்தபோது, ஷா ரஷீத் அகமது குவாத்ரி, பிரதமரிடம் கைகுலுக்கி, “நான் கர்நாடகாவில் உள்ள பிதாரைச் சேர்ந்தவன். ஐந்து ஆண்டுகளாக காங்கிரஸ் ஆட்சியில் இந்த விருதுக்கு விண்ணப்பித்தேன். எனக்கு அது கிடைக்கவில்லை. பா.ஜ.க அரசு அதன் பிறகு ஆட்சிக்கு வந்தது, இது பா.ஜ.க அரசு, எனவே, முஸ்லிம்களுக்கு விருது வழங்காது என்று நினைத்து அமைதியாக இருந்துவிட்டேன். ஆனால் நீங்கள் என்னை தேர்ந்தெடுத்து என் சிந்தனை தவறு என நிரூபித்துள்ளீர்கள். இதற்கு மிக்க நன்றி” என தெரிவித்தார்.
இதுகுறித்த ஒரு ஊடக உரையாடலின் போது, ஷா ரஷீத் அகமது குவாத்ரி, “நான் பத்து வருடங்களாக இந்த விருதுக்காக முயற்சித்தேன். ஒவ்வொரு வருடமும் இதற்காக எனக்கு ரூ. 12,000 செலவானது. எனக்கு இவ்வளவு பெரிய சுயவிவரம் உள்ளது. இதில் 50 வண்ண புகைப்படங்கள் உள்ளன. அதுவும் எனக்கு நிறைய செலவானது. ஐந்தாண்டுகளுக்குப் பிறகு பா.ஜ.க அரசு ஆட்சிக்கு வந்தது. பா.ஜ.க அரசு ஒரு முஸ்லிமுக்கு எதையும் தருவதில்லை என்று நினைத்து விருதுக்கு விண்ணப்பிப்பதை நான் விட்டுவிட்டேன். ஆனால் மோடிஜி, என்னைத் தேர்ந்தெடுத்து என் எண்ணம் தவறு என்பதை நிரூபித்தார். மோடி ஜி, அமித் ஷா ஜி மற்றும் இந்த விருதில் முக்கிய பங்காற்றிய அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஜனவரியில் மத்திய அரசிடம் இருந்து இதற்காக அழைப்பு வந்தபோது நான் மிகவும் ஆச்சரியப்பட்டேன். ஆறு நூற்றாண்டு பழமையான பித்ரிவேரை மத்திய அரசு அங்கீகரித்து பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவிக்கும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. மத்திய அரசின் அதிகாரி ஒருவர், இந்த தேசிய விருது வழங்கப்படுவதைப் பற்றி தெரிவிக்கும் வரை என்னால் அதனை நம்பவே முடியவில்லை” என கூறினார்.
68 வயதான ஷா ரஷீத் அகமது குவாத்ரி, தனது 10 வயதில் இருந்து இந்த பாரம்பரிய கைவினைப்பொருள் தயாரிப்பை தொடங்கினார். பித்ரிவேர் தயாரித்த ஒரு கைவினைஞரான அவரது தந்தை ஷா முஸ்தபா குவாத்ரியை பின்பற்றி அவர் அந்த கலையை கற்கத் தொடங்கினார். ரஷீத் குவாத்ரி கைவினைப்பொருள் தயாரிப்பில் ஒரு நீண்ட பாரம்பரியத்தைக்கொண்ட குடும்பத்தில் இருந்து வந்தவர். அவரது குடும்பத்தில் முதன்முதலில் இந்த பழமையான கைவினைப் பணியைத் தொடங்கியது அவரது தாத்தா ஷா முஹம்மது குவாத்ரி ஆவார். ஷா ரஷீத் அகமது குவாத்ரி, இதற்கு முன்பு 1984ல் மாநில விருது, 1988ல் தேசிய விருது, 1996ல் மாவட்ட கர்நாடகா ராஜ்யோத்சவா விருது மற்றும் 2004ல் தி கிரேட் இந்தியன் அச்சீவர்ஸ் விருது உட்பட பல விருதுகளைப் பெற்றுள்ளார்.