புதுக்கோட்டை மாவட்டம் நற்பவளக்குடியைச் சேர்ந்த பழனிச்சாமி என்பவர், சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், நற்பவளக்குடியில் செயல்பட்டு வந்த டாஸ்மாக் மதுக் கடை, தற்போது கல்வி நிலையங்கள் அருகே மாற்றப்பட்டுள்ளது. இதனால், மது அருந்திவிட்டு கல்வி நிலையங்களில் மதுபாட்டில்களை வீசி செல்வதால் மாணவ, மாணவிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகின்றனர். எனவே, மதுபானக் கடையை வேறு இடத்துக்கு மாற்ற உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், ‘கல்வி நிறுவனம் அருகே மதுக்கடை திறக்க எவ்வாறு அனுமதி வழங்கப்பட்டது?’ என கேள்வி எழுப்பினர். அரசு வழக்கறிஞர், ‘அந்த கல்வி நிறுவனம் தற்போது செயல்படாமல் உள்ளது’ என கூறினார். இந்த பதிலால் அதிருப்தியடைந்த நீதிபதிகள், ‘கல்வி நிறுவனங்கள் அருகே மதுக்கடை அமைக்க அனுமதி வழங்கக் கூடாது என்பது மாவட்ட ஆட்சியருக்கு தெரியாதா, பள்ளி, கல்லூரி அருகே மதுக்கடை திறந்தால் மாணவர்கள் எவ்வாறு கெட்டுப்போகாமல் இருப்பார்கள்? என கேள்வியெழுப்பினர். மேலும், போதையில்லா தமிழகத்தை உருவாக்குவோம் என பேசிவிட்டு, கல்லூரி அருகே அரசே மதுக் கடைகளை திறப்பதால் சமூகம் கெட்டுப்போகிறது’ என வேதனை தெரிவித்தனர். பின்னர் நீதிபதிகள், “மது விற்பனையில் ஈடுபடுவது அரசின் கொள்கை முடிவாக இருக்கலாம். ஆனால் அதற்கு உள்ளூர் மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கும்போது நீதிமன்றம் அதில் தலையிட வேண்டியுள்ளது. குறிப்பிட்ட அந்த இடத்தில் மதுக்கடை செயல்பட இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது. மதுக்கடை அமைந்துள்ள இடத்தில் உள்ள கல்வி நிறுவனம் தற்போது செயல்பாட்டில் உள்ளதா? அங்கு பள்ளி, கல்லூரி, கோயில்கள் உள்ளனவா என்பது குறித்து அரசு தரப்பில் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை தள்ளி வைத்தனர்.