முதல்வருக்கு கருணை காட்ட மறுப்பு

மும்பையிலுள்ள கஃபே பரேட் மைதானத்திலுள்ள யஷ்வந்த் ராவ் சவாண் அரங்கத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற நிகழ்ச்சியில் மேற்குவங்க முதல்வரும் திருணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவருகான மமதா பானர்ஜி பங்கேற்றார். இந்நிகழ்ச்சியில் தேசிய கீதம் இசைக்கப்பட்ட போது அதற்கு உரிய மரியாதை தராமல் மமதா நாற்காலியிலேயே அமர்ந்திருந்தார். ஆனால், தேசிய கீதத்தை அரைகுறையாக பாடினார். பாடல் முடிவதற்கு முன்னதாக எழுந்து நின்ற நிலையில் 2 வரிகளைப் பாடினார். தேசிய கீதம் பாடி முடிக்கப்படுவதற்கு முன்பாகவே அரங்கை விட்டு முதல்வர் மமதா வெளியேறினார். இதைக் கண்டித்து சமூக செயற்பாட்டாளர் விவேகானந்த் குப்தா என்பவர் மும்பை செஷன்ஸ் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு மமதா பானர்ஜிக்கு நீதிமன்றம் சம்மன் அனுப்பியது. உடனடியாக, இந்த வழக்கையும் அனுப்பப்பட்ட சம்மன்களையும் ரத்து செய்ய கோரி மும்பை உயர் நீதிமன்றத்தில் மமதா சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு மும்பை உயர் நீதிமன்ற தனி நீதிபதி அமித் போர்க்கர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, “இந்த வழக்கை செஷன்ஸ் நீதிமன்றமே விசாரிக்கலாம். இதில் உயர் நீதிமன்றம் தலையிடாது. மேலும் இந்த வழக்கில் மமதாவுக்கு எந்தவிதக் கருணையையும் நீதிமன்றம் காட்டக்கூடாது எனகூறி, மமதா தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.