கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் நேற்று தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் செய்தியாளர்களை சந்தித்தபோது கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் தேதியை அறிவித்தார். அதன்படி 224 தொகுதிகளைக் கொண்ட கர்நாடக சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக மே 10ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும். வாக்கு எண்ணிக்கை மே 13ம் தேதி நடைபெறும் என்று அவர் அறிவித்தார். அவர் வெளியிட்ட தேர்தல் அட்டவணையில், வேட்புமனு தாக்கல் தொடங்கும் நாள் ஏப்ரல் 13, வேட்புமனு தாக்கல் கடைசி நாள் ஏப்ரல் 20, வேட்புமனு பரிசீலனை ஏப்ரல் 21, வேட்புமனு வாபஸ் பெற கடைசி நாள் ஏப்ரல் 24, வாக்குப்பதிவு நடைபெறும் நாள் மே 10, வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாள் மே 13 என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்களிக்கத் தகுதியான ஆண் வாக்காளர்கள்: 2.62 கோடி, பெண் வாக்காளர்கள்: 2.59 கோடி. மொத்த வாக்காளர்கள்: 5 கோடியே 21 லட்சம். தேர்தலில் மக்கள் வாக்களிக்க 58,282 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும். 36 தொகுதிகள் பட்டியல் சமூக வேட்பாளர்களுக்கும், 15 தொகுதிகள் வனவாசி சமூக வேட்பாளர்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் 80 வயதுக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் எண்ணிக்கை 12.15 லட்சம். 16,976 வாக்காளர்கள் 100 வயதை கடந்தவர்கள் ஆவர். மாற்றுத்திறனாளிகள் 5.55 லட்சம் பேர். 9.17 லட்சம் முதன்முறை வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளனர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் அங்கு உடனடியாக தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன.