பிரதமர் நரேந்திர மோடியை அவதூறு செய்வதாகக் கருதிக்கொண்டு, ‘மோடி’ என்ற பெயர் கொண்ட ஒரு ஓ.பி.சி சமூகப் பிரிவினரை ஒட்டுமொத்தமாக அவமானப்படுத்தி பேசினார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி. இதனையடுத்து ராகுல் மீது அந்த சமூகத்தினர் தொடர்ந்த வழக்கில் குஜராத் நீதிமன்றம் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. இதைத்தொடர்ந்து அவரது எம்.பி. பதவி பறிக்கப்பட்டுள்ளது. ராகுல் காந்தி மீதான நீதிமன்றத்தின் இந்த நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் சிறுபிள்ளைத்தனமாக கண்டனம் தெரிவித்து வருகின்றன.
இந்த சூழலில், இவ்விவகாரம் தொடர்பாக பேசிய மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, “மோடி பெயர் தொடர்பான கருத்து மூலம் ராகுல் காந்தி, பிரதமர் மோடி மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரை அவமதித்து உள்ளார். வேண்டும் என்றே சாவர்க்கர் மற்றும் மோடியை அவமதித்த ராகுல் காந்தியை கடுமையாகக் கண்டிக்கிறேன். இப்படியே போனால் பொது மக்கள் ராகுல்காந்தியை தெருவில் நடமாட விடமாட்டார்கள். சாவர்க்கரை அவமதித்த ராகுல் காந்தியை உத்தவ் தாக்கரே தரப்பினர் ஆதரிப்பது துரதிருஷ்டவசமானது. ராகுல் காந்தி கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது ‘காவலாளியே திருடன்’ என கூறினார். அப்போது மக்கள் அவருக்கு தேர்தல் மிகப்பெரிய தோல்வி மூலம் பாடம் கற்றுகொடுத்தனர். ராகுல் காந்தி வெளிநாட்டில், நாட்டின் பிரதமர் மற்றும் மிக உயர்ந்த ஜனநாயகத்துக்கு எதிராக பேசுகிறார். பாரத ஒற்றுமை யாத்திரை நடத்தினார். ஆனால் அதில், பாரதத்தை துண்டாடுவதை குறித்து பேசியிருந்தார். காங்கிரஸ் ஆட்சியின் போது கொண்டு வரப்பட்ட சட்டத்தால் தான் ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டு இருக்கிறார்” என கூறினார்.
இந்த நிலையில், சாவர்க்கர் குறித்து ராகுல் பேசியதற்கு உத்தவ் தாக்கரேவும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக உத்தவ் தாக்கரே கூறுகையில், “அந்தமான் சிறையில் கற்பனை கூட செய்ய முடியாத அளவுக்கு பல கொடூரங்களை 14 ஆண்டுகள் சாவர்க்கர் அனுபவித்தார். அது மிகப்பெரிய தியாகம். சாவர்க்கரை இழிவுபடுத்துவதை சகித்துக்கொள்ள மாட்டோம். சாவர்க்கர் எங்களின் கடவுள். அவரை அவமரியாதை செய்வதை ஏஎற்றுகொள்ள முடியாது. நாம் போராட தயாராகிக் கொண்டு இருக்கிறோம். ஆனால், எங்களின் கடவுளை இழிவுபடுத்துவது என்பது சகித்துக் கொள்ள முடியாது. இது எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் பிளவை ஏற்படுத்தும்” என்றார்.