வக்ஃப் சட்டத்தை எதிர்த்து 120 மனுக்கள்

வக்ஃப் சட்டத்தின் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட விதிகளை எதிர்த்து ஏறக்குறைய 120 ரிட் மனுக்கள் நாட்டில் உள்ள பல்வேறு நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளதாக டெல்லி உயர் நீதிமன்றத்திற்கு மத்திய அரசு தெரிவித்துள்ளது. தலைமை நீதிபதி சதீஷ் சந்திர சர்மா, நீதிபதி சச்சின் தத்தா அடங்கிய அமர்வு, அத்தகைய சட்டத்தின் சில விதிகளை எதிர்த்து வழக்கறிஞர் அஸ்வினி குமார் உபாத்யாய தாக்கல் செய்த பொதுநல வழக்கை விசாரித்த போது, அனைத்து வழக்குகளையும் ஒருங்கிணைப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பதற்கான வழிமுறைகளைப் பெறுமாறு மத்திய அரசு வழக்கறிஞரைக் கேட்டுக் கொண்டது. மத்திய அரசின் வழக்கறிஞர், உரிய நடவடிக்கைகளை எடுக்கவும், இதுபோன்ற அனைத்து வழக்குகளையும் ஒருங்கிணைப்பதற்கான வழிமுறைகளைப் பெறவும் கால அவகாசம் வேண்டும் என்று கூறியது.

மத்திய அரசு, தற்போதைய மனுவின் மீது தாக்கல் செய்த விண்ணப்பத்தில், பதிலைத் தாக்கல் செய்ய கால அவகாசத்தை மூன்று மாதங்கள் நீட்டிக்கக் கோரியது. இந்த வழக்கைத் தவிர, வக்ஃப் சட்டம் 1995 ன் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட விதிகளை எதிர்த்து கிட்டத்தட்ட 120 ரிட் மனுக்கள் பல்வேறு நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன. நிலுவையில் உள்ள அனைத்து விஷயங்களிலும் தெளிவான மற்றும் நிலையான பார்வை எடுக்கப்படுவதை உறுதிப்படுத்துவது அவசியம்” என்று பதில் சமர்ப்பித்தது. இதில் மனுக்களை முழுமையாக ஆய்வு செய்வது மட்டுமல்லாமல், மாநில அரசுகள் போன்ற பங்குதாரர்களுடன் கலந்துரையாடல் மற்றும் அரசு வழக்கறிஞர்களுடன் கலந்தாலோசிப்பது ஆகியவையும் அடங்கும். பெரும்பாலான வழக்குகளில் எதிர் பிரமாணப் பத்திரங்கள் தாக்கல் செய்யப்படவில்லை என்றும், தற்போதைய வழக்கில் உள்ள மனுதாரர், அனைத்து வழக்குகளையும் மாற்றுவதற்காக உச்ச நீதிமன்றத்தில் ஏற்கனவே ‘பரிமாற்ற மனு’ தாக்கல் செய்துள்ளார் என்றும் அந்த விண்ணப்பத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசாரணையின் போது, ​​அஸ்வினி உபாத்யாய, “வழக்குகளின் அளவைக் கருத்தில் கொண்டு, அனைத்து வழக்குகளையும் ஒரே நீதிமன்றத்திற்கு மாற்றுவதற்கான மனுவை மத்திய அரசு தாக்கல் செய்ய வேண்டும். வக்ஃப் சட்டத்தின் சில விதிகளின் செல்லுபடியாகும் தன்மையை ஆய்வு செய்ய வேண்டும். அறக்கட்டளை மற்றும் அறங்காவலர்கள், தொண்டு நிறுவனங்கள், மத நன்கொடைகள் மற்றும் நிறுவனங்களுக்கு ஒரே மாதிரியான சட்டத்தை இயற்ற மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும். இஸ்லாம் அல்லாத மதக் குழுக்களால் நடத்தப்படும் அறக்கட்டளைகள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் மத நிறுவனங்களுக்கு வழங்கப்படாத எந்தவொரு ‘சிறப்பு உரிமைகளையும்’ வக்ஃப் சொத்துக்கள் அனுபவிக்க முடியாது” என்று கோரியுள்ளார்.

மேலும், தனது மனுவில், “வக்ஃப் சொத்துக்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து வெளிப்படையாக தன்னிச்சையானது என்றும், பகுத்தறிவற்றது மற்றும் அரசியலமைப்பின் 14 மற்றும் 15 வது பிரிவுகளை புண்படுத்துவதாகவும் வாதிட்டார். ‘வக்ஃப் சொத்துக்களை நிர்வகித்தல்’ என்ற போர்வையின் கீழ் உருவாக்கப்பட்ட வக்ஃப் சட்டம் 1995ன் விதிகளின் செல்லுபடி கேள்விக்குரிய்து. ஆனால் ஹிந்து மதம், பௌத்தம், சமணம், சீக்கியம், யூதம், பஹாய்சம், ஜோராஸ்ட்ரியனிசம் மற்றும் கிறித்துவம் ஆகியவற்றைப் பின்பற்றுபவர்களுக்கு இது போன்ற சட்டங்கள் எதுவும் இல்லை. எனவே, இது தேசத்தின் மதச்சார்பின்மை, ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுக்கு எதிரானது” என அவரது மனுவில் கூறப்பட்டுள்ளது.

“வக்ஃப் சட்டம், வக்ஃப் வாரியங்களுக்கு பரந்த மற்றும் கட்டுப்பாடற்ற அதிகாரங்களை வழங்கியுள்ளது. வக்ஃப் சொத்துக்கள் மற்ற தொண்டு மத நிறுவனங்களுக்கும் மேலே வைக்கப்பட்டுள்ளது. வேறு எந்தச் சட்டமும் இவ்வளவு பரந்த அதிகாரங்களையும் அந்தஸ்தையும் வழங்கவில்லை. ஒரு குறிப்பிட்ட சொத்து வக்ஃப் சொத்தா இல்லையா என்பதை முடிவு செய்யும் அதிகாரம் வாரியத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. பிரிவு 40ன் கீழ், எந்தவொரு அறக்கட்டளை அல்லது சங்கத்திற்கு சொந்தமான எந்த சொத்தையும் கேள்வி கேட்கலாம் மற்றும் அதை வக்ஃப் சொத்தாக அறிவிக்க அதிகாரம் அதற்கு உள்ளது. வக்ஃபு வாரியத்தால் வக்ஃப் சொத்தாக கருதப்படும் நபர்களுக்கு எந்த பாதுகாப்பும் வழங்கப்படவில்லை. பிரிவு 40ன் கீழ் வக்ஃப் வாரியத்தால் நிறைவேற்றப்பட்ட முடிவு ஏதேனும் இருந்தால், அதைப் பற்றி அறிய அவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுவது இல்லை. வக்ஃப் தீர்ப்பாயத்தை உருவாக்குவது தன்னிச்சையானது. குடிமையியல் இயல்பின் ஒவ்வொரு சர்ச்சையும் சிவில் நீதிமன்றத்தால் தீர்மானிக்கப்பட வேண்டும்” என்று வாதிட்டார். இந்த வழக்கு அடுத்த ஜூலை மாதம் விசாரணைக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.