திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா வடக்குப்பட்டி அருகேயுள்ள ஏ.கோம்பையைச் சேர்ந்தவர் திருமூர்த்தி. கல் உடைக்கும் தொழிலாளரியான இவருக்கு அப்பகுதியில் சொந்தமாக இரண்டே கால் ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தை தி.மு.க.வைச் சேர்ந்த அய்யலூர் பேரூராட்சித் தலைவர் கருப்பன், தனதுபெயருக்கு எழுதிக் கொடுக்கும்படி அடியாட்களை வைத்து மிரட்டி வந்துள்ளார். இதற்கு மறுத்துவிட்ட திருமூர்த்தி குடும்பத்தினரை, தனது அடியாட்களைக்கொண்டு கிராமத்தை விட்டே விரட்டி அடித்துள்ளார். மேலும், நிலத்தை எழுதித் தரவில்லை என்றால் குடும்பத்தையே கொன்றுவிடுவேன் என மிரட்டியுள்ளார் தி.மு.க பேரூராட்சித் தலைவர் கருப்பன். இதனால் கடந்த 15 நாட்களாக வீட்டுக்குச் செல்ல முடியாமல் திருமூர்த்தியின் குடும்பம் தவித்து வருகிறது. இதனால், வேறுவழியின்றி, பாதிக்கப்பட்ட திருமூர்த்தி, தனது குடும்பத்தினருடன் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குச் சென்று புகார் மனு கொடுத்துள்ளார். சமீபத்தில், சேலத்தில் விவசாயி ஒருவரின் நிலத்தை தி.மு.க. பிரமுகர் அபகரிக்க முயன்றதால், அந்த விவசாயி கோவணத்துடன் ஆட்சியர் அலுவலகத்குக்கு சென்று மனு கொடுத்தார். சில நாட்களுக்கு முன், விழுப்புரத்தில் மூதாட்டி ஒருவரின் நிலத்தை எழுதிக் கேட்டு மிரட்டிய தி.மு.க. நிர்வாகி ஒருவர் அந்த மூதாட்டியை தாக்கிய சம்பவம் அரங்கேறியது நினைவு கூரத்தக்கது.