23ம் புலிகேசியான காவல்துறை

டெல்லி செல்லும் முன் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது எழுப்பப்பட்ட தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர், “23ம் புலிகேசி படம் போலவே தான் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு உள்ளது. தினசரி காலை முதல்வர், டி.ஜி.பியிடம் நம்மைப் பற்றி சமூக வலைதளங்களில் யார் தவறாக பேசி உள்ளனர் என்று கேட்கிறார். இவர்களை கைது செய்ய தான் இந்த அரசு முனைப்பு காட்டுகிறது. சமூக வலைதளத்தில் கருத்து பதிவிடுபவர்களை கைது செய்வதற்காக காவல்துறை ஓடிக்கொண்டு இருக்கிறது. சமூக வலைதளத்தில் வரும் கருத்துகள், முதல்வருக்கு முள் போல் குத்துகிறது. மாநிலத்தில் கொலை, கொள்ளை, போதைப்பொருள் நடமாட்டம் போன்றவை அதிகரித்து உள்ளது. இது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பெண்கள், குழந்தைகள் மீது வன்மத்தை காட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. இவை 2021ம் ஆண்டை விட 2022 முதல் அதிகரித்து விட்டது. மேலும், வருவாய் துறை அதிகாரிகள், ஆட்சியர், உளவுத் துறை உள்பட முழு அரசு அதிகாரிகளை அண்ணாமலை மீது ஏவி விட்டு சொத்து எவ்வளவு, எவ்வளவு சம்பாதித்தான், கர்நாடகவில் 9 ஆண்டுகள் பணியில் இருந்த போது ஒரு பைசா லஞ்சம் வாங்கினாரா என்பதை தேடி பிடித்து வந்து சொல்ல சொன்னால் அதற்கு பதிலளிக்க தயாராக இருக்கிறேன்” என்றார். கூட்டணிக் கட்சித் தலைவர்கள் தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அண்ணமலை, “இந்த விமர்சனங்களை நல்லதாகவே பார்க்கிறேன். பா.ஜ.கவின் வளர்ச்சியை அவர்கள் ரசிக்க விரும்பவில்லை. யாராக இருந்தாலும் அவர்களின் கட்சி வளர வேண்டும் என்றுதானே நினைப்பார்கள்? கூட்டணிக் கட்சியாக இருந்தாலும் கூட பா.ஜ.கவை வளர்க்க வேண்டும் என்று அவர்கள் நினைத்தால் அது முட்டாள் தனம். நான் பா.ஜ.கவில் இருந்து வேறு கட்சியை வளர்க்க வேண்டும் என்று நினைத்தால் நான் முட்டாள். அரசியலில் நிரந்தரமான நண்பர்களும் கிடையாது. நிரந்தரமான எதிரிகளும் கிடையாது. தனித்து போட்டியிடுவது என்பது எங்களுக்கும் தமிழக மக்களுக்கும் இடையே உள்ள பிரச்சினை. உங்கள் கடையை திறக்க நான் ஆள் இல்லை” என்று பதில் அளித்தார்.