சங்கரதாஸ் சுவாமிகள்

கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனால் “நாடக உலகின் இமயமலை“ என்று வர்ணிக்கப்பட்ட சங்கரதாஸ் சுவாமிகளின் வரலாற்றை  இன்றைய இளம் தலைமுறையினர் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும். தமிழ் நாடகக் கலையின் வளர்ச்சியை இவரது காலத்துக்கு முன் இவரது காலத்திற்கு பின் என்று பிரித்துப் பார்க்கும் அளவிற்கு தமிழ் நாடகங்களில் இவரது பங்கு அளப்பரியது. தமிழ் நாடக தலைமை ஆசிரியர், மறு மலர்ச்சியாளர், தமிழ் நாடக விடிவெள்ளி என்றெல்லாம் கொண்டாடப்பட்ட தவத்திரு சங்கரதாஸ் சுவமிகள் அவர்களின் வரலாறு சற்று சுருக்கமாக…

சங்கரதாஸ் சுவாமிகள் திருநெல்வேலி மாவட்டத்தில் தூத்துக்குடிக்கு அருகில் உள்ள காட்டு நாயக்கன் பட்டி என்ற சிற்றூரில் 22.3.1867ஆம் ஆண்டு பிறந்தார். இவரது தந்தையார் தாமோதரன், தாயார் பேச்சியம்மாள் ஆவர். பெற்றோர் இவருக்கு வைத்த பெயர் சங்கரன் என்பது. அது நாடக உலகில் சங்கரதாஸ் சுவாமிகளாக மாறிவிட்டது.

சிறுவயதில் தம் தந்தையாரிடமும், பின்னர்ப் பழனி தண்டபாணி சுவாமிகளிடமும் இலக்கண இலக்கியங்களைப் பயின்றார். தம் 24ஆம் வயதில் முழுநேர நாடகக் கலைஞர் ஆனார். அப்போது நாடகத்துக்கு இசையும் பாட்டும் இன்றிமையாதவைகளாக இருந்த காரணத்தால் சங்கரதாஸ் சுவாமிகள் புதுக்கோட்டை மான்பூண்டியா பிள்ளையிடம் இசைப் பயிற்சி பெற்றார். இலக்கண இலக்கியப் பயிற்சி, இசைப் பயிற்சி ஆகிய தகுதிகளுடன்தான் சங்கரதாஸ் சுவாமிகள் முழுநேர நாடக் கலைஞர் ஆனார்.

இதனாலேயே இவரது நாடகங்கள் நல்ல மொழி வளங்களோடு இருந்தன. எமதர்மன், சனீஸ்வரன், இராவணன், இரணியன், கடோற்கஜன் போன்ற பாத்திரங்களை ஏற்று நடித்த சங்கரதாஸ் சுவாமிகள், தான் ஏற்கும் கதாபாத்திரமாகவே மாறி ரசிகர்களை கட்டிப்போட்டார். பார்ப்பவர்களை அசத்தும் திறமை பெற்ற சங்கரதாஸ் சுவாமிகள், ஒரு கட்டத்தில் நடிப்பை விட்டு நாடகங்களை எழுதி இயக்குவதோடு தன் பங்களிப்பை சுருக்கிக்கொண்டார்.

இதன் பின்னனியின் ஒரு சோக சம்பவம் இருக்கிறது. ஒருமுறை நாடகத்தில் சனீஸ்வர பகவான் வேடமேற்று நடித்தவர், நாடகம் முடிந்ததும் வேஷத்தைக் கலைக்க அந்த ஊரின் ஏரிக்கு சென்றார். அப்போது அங்கு துணி துவைத்துக் கொண்டிருந்த ஒரு கர்ப்பிணி, சனீஸ்வர வேடத்தில் இருந்த சங்கரதாஸ் சுவாமிகளைக் கண்டதும் பயத்தில் மயங்கிவிழுந்து அங்கேயே இறந்துவிட்டார். இந்த சம்பவம் அவரை அதிகம் பாதித்ததால் அன்றிலிருந்து வேஷமிடுவதை நிறுத்திக் கொண்டார். சோகமான சம்பவமானாலும சங்கரதாஸ் சுவாமிகளின் கதாபாத்திர பொருத்தத்துக்கு இது ஒரு முக்கிய உதாரணம்.

சங்கரதாஸ் சுவாமிகள் சுமார் அறுபதுக்கும் மேற்பட்ட நாடகங்களை எழுதி இயக்கியிருக்கிறார். இதில்  ‘‘வள்ளி திருமணம், பவளக் கொடி சரித்திரம், வீர பாண்டிய கட்டபொம்மன், மதுரை வீரன், அரிச்சந்திர மயான காண்டம், சத்தியவான் சாவித்திரி, கோவலன் சரித்திரம், நள தமயந்தி, இராம இராவண யுத்தம், சித்திராங்கி விலாசம் போன்றவை அவருக்கு புகழ் தந்த நாடகங்கள். இதில் பெரும்பாலானவை திரைப்படமாக எடுக்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஷேக்ஸ்பியரின் நாடகங்களையும் அந்தக் காலத்திலேயே தமிழில் மொழி பெயர்த்திருக்கிறார் என்பதிலேயே  சங்கரதாஸ் சுவாமிகளின் ஆங்கிலப் புலமையையும் நாம் அறிய முடியும்.

தலைசிறந்த மொழி அறிவும் நாடக உருவாக்கப் புதுமையும் சுவாமிகளிடம் மிகவும் கூடுதலாக இருந்ததால் நாடகத்துக்குப் புதுமெருகு ஏற்றினார். அதனால் இவரிடம் பெரிய மாணவர் கூட்டம் இருந்தது. வண்டுகள் மலரை மொய்ப்பது போல் மாணவர்கள் சுவாமிகளைச் சூழ்ந்து கொண்டே இருந்தனர்.

ஜி.எஸ்.முனுசாமி நாயுடு, சாமிநாத முதலியார், சீனிவாச ஆழ்வார், நடேச பத்தர், எம்.ஆர்.கோவிந்தசாமிப் பிள்ளை, சி.கன்னையா, சி.எஸ்.சாமண்ணா, சுந்தரராவ், சூரிய நாராயண பாகவதர், மதுரை மாரியப்ப சுவாமிகள், எஸ்.ஜி.கிட்டப்பா, ஆர்.வி.மாணிக்கம், தி.க.சண்முகம் சகோதரர்கள் ஆகியோர் ஆண் மாணவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்.

திருமதி பாலாம்பாள், பாலாமணி, அரங்கநாயகி, கோரங்கி மாணிக்கம், டி.டி.தாயம்மாள் போன்றோர் மாணவிகளில் குறிப்பிடத்தகுந்தவர்கள்.

திரைப்படங்களில் பின்னாளில் புகழ்பெற்று விளங்கிய கே.சாரங்கபாணி, ஆர்.பாலசுப்பிரமணியம் ஆகியோரும் சுவாமிகளின் மாணவர்களே ஆவர்.

தம் வாழ்க்கையை நாடக கலைக்கே அர்ப்பணித்து வாழ்ந்த சங்கரதாஸ் சுவாமிகள், திருமணமே செய்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் நாடக மேடைகளுக்கு தன் உழைப்பின் மூலம் பெரும் மரியாதையை ஏற்படுத்திய சங்கரதாஸ் சுவாமிகள், தமிழகத்தின் பட்டிதொட்டி எங்கும் சுற்றி தனது கலைச் சேவையை செய்தார். விழுப்புரத்தில் ஒரு நாடகத்தை இயக்கிக் கொண்டிருந்தபோது திடீர் உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டார். அப்போது அவருக்கு வயது 55.

உடனடியாக வ.சுப்பையா,  சங்கரதாஸ் சுவாமிகளை புதுச்சேரிக்கு அழைத்து வந்து மருத்துவமனையில் சேர்த்தார்.  தொடர் சிகிச்சைக்காக இங்கேயே தங்கும் சூழல் ஏற்பட்டு விட்டது. இருப்பினும் விடாது தன்னால் முடிந்த அளவு நாடக கலைக்கு தொண்டு புரிந்த  சங்கரதாஸ் சுவாமிகள், பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு பின் மரணமடைந்தார்.

புதுவையில் இரண்டு வருடங்கள் அவர் தங்கியிருந்த  தெருவுக்கு ‘‘சங்கராதாஸ் வீதி‘‘ பெயர் சூட்டி கவுரவித்தது அரசு. சங்கரதாஸ் சுவாமிகளின் பெயர் தாங்கியதால் வரலாற்றில் தன்னையும் இணைத்துக் கொண்டது அந்த தெரு.

                                           – திருமதி. புவனேஸ்வரி!