கன்னியாகுமரிக்கு நேற்று குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வருகை தந்தார். 2 மணி நேரம் கன்னியாகுமரியில் இருந்த அவர், விவேகானந்தர் மண்டபத்திற்கும், பாரத மாதா கோயிலுக்கும் சென்றார். குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு கேரளாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டரில் கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகைக்கு காலை 9 மணிக்கு வந்தார். கன்னியாகுமரி வந்த குடியரசு தலைவர் திரவுபதி முர்முவை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகையில் இருந்து பூம்புகார் கப்பல் போக்கவரத்து கழக படகு துறைக்கு காரில் சென்ற குடியரசுத் தலைவர், அங்கிருந்து படகில் விவேகானந்தர் மண்டபத்திற்கு சென்றார். விவேகானந்தர் மண்டபத்தை பேட்டரி கார் மூலம் சுற்றி பார்த்த அவர் அங்கு நின்றவாறே அருகே உள்ள பாறையில் அமைந்திருக்கும் திருவள்ளுவர் சிலையையும் ரசித்தார்.கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திராவில் உள்ள பாரத மாதா கோயிலில் ராமாயண கண்காட்சியை பார்வையிட்ட குடியரசுத் தலைவர். பின்னர் விவேகானந்தர் மண்டபத்திற்குள் அமைந்திருக்கும் சுவாமி விவேகானந்தரின் சிலையை வணங்கி மரியாதை செலுத்தினார். அங்குள்ள தியான மண்டபத்தில் தியானம் செய்தார். 40 நிமிடங்கள் விவேகானாந்தர் பாறையில் இருந்த குடியரசு தலைவர் திரவுபதி முர்மு பின்னர் படகு மூலம் கரை திரும்பினார்.