சவுராஷ்டிரா தமிழ்ச் சங்கமத்திற்கான இணையதளம்

குஜராத்தில் ‘சவுராஷ்டிரா தமிழ்ச் சங்கமம்’ 10 நாட்களுக்கு நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பை மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா சென்னையில் வெளியிட்டார். அப்போது இதற்கான இணைய தளத்தை அவர் தொடங்கி வைத்தார்.

உ.பி.யின் வாரணாசியில் காசி தமிழ்ச் சங்கமம் நடைபெற்றது. அதுபோன்று குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ‘சவுராஷ்டிரா தமிழ்ச் சங்கமம்’, ஏப்ரல் 14 முதல் 24-ம் தேதி வரையில் 10 நாட்களுக்கு நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சிக்கான அறிவிப்பை மத்திய சுகாதாரம் மற்றும் உரத்துறை அமைச்சர் மன்சுக் மாண் டவியா இன்று சென்னையில் வெளியிட்டார். இத்துடன் சங்கமத்திற்காக ஒரு இணைய தளத்தையும் அவர் தொடங்கி வைத்தார். குஜராத்தை சேர்ந்த இவர் அங்கிருந்து மாநிலங்களவை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டவர்.நிகழ்ச்சியில் தமிழகத்தை சேர்ந்த மத்திய அமைச்சர் எல்.முருகனும் கலந்து கொண்டார். இவர்களுடன், குஜராத் மாநில அமைச்சர்கள் குவாரி ஜிபாய் பவாலியா, ஜெக்தீஷ் விஸ்வகர்மா ஆகியோரும் கலந்து கொண்டனர். இது, தமிழ்நாடு மற்றும் சவுராஷ்டிராவின் வேர்களை கொண்டாடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

காசி சங்கமத்தில் ஆன்மிகம் முன்னிறுத்தப்பட்டது. குஜராத் நிகழ்ச்சியில் சுகாதாரம் முக்கியக் கருப்பொருளாக உள்ளது. இதனால் தமிழகத்தில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளுடன் ஒப்பந்தங்கள் செய்துகொள்ள குஜராத் தயாராகிறது. நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொள்ளும் தமிழர்கள் மதுரையிலிருந்து புறப்படும் ரயில்களில் அனுப்பி வைக்கப்படுகின்றனர். உ.பி. நிகழ்ச்சிக்கு செல்வதற்கான ஏற்பாடுகளை சென்னை ஐஐடி செய்திருந்தது. இந்த முறை திருச்சியில் உள்ள மத்திய அரசு கல்வி நிறுவனமான என்ஐடி செய்கிறது.சங்கமம் நிகழ்ச்சிக்கு வரும் தமிழர்கள், குஜராத் அரசின் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்கிறார்கள். இவர்கள் அகமதாபாத் நிகழ்ச்சியுடன், அருகிலுள்ள சோம்நாத், துவாரகா கோயில்களுக்கும் அழைத்துச் செல்லப்படுகின்றனர். கேவடியாவில் பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட்ட சர்தார் வல்லபபாய் படேல் சிலையும் இப்பட்டியலில் இடம் பெற்றுள்ளது. தமிழகத்தில் வாழும் சவுராஷ்டிரா தமிழர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இந்த நிகழ்ச்சிக்கு, ‘சவுராஷ்டிரா தமிழ்ச் சங்கமம்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.