மத்தியப் பிரதேசத்தின் திண்டோரி மாவட்டத்தில் பழங்குடியினர் அதிகம் வசிக்கும் பகுதியில் உள்ள கிறிஸ்தவ மிஷனரி போர்டிங் பள்ளியின் முதல்வர் கைது செய்யப்பட்டுள்ளார். மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக நான்கு பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. சுமார் 600 மாணவ மாணவிகள் தங்கியுள்ள விடுதியில் குழந்தைகள் நலக் குழுவின் மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் (எஸ்.சி.பி.சி.ஆர்) சனிக்கிழமை நடத்திய ஆய்வின் போது இந்த விஷயம் வெளிச்சத்துக்கு வந்தது. ஆய்வுக் குழுவுடனான உரையாடலின் போது, பெண் மாணவிகளின் குழு ஒன்று, பள்ளி ஊழியர்களால் உடல் ரீதியாக பாலியல் துன்புறுத்தல் நடப்பதை தெரிவித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் விசாரனை செய்யப்பட்டது. இதனையடுத்து பள்ளி முதல்வர் நான் சிங் யாதவ் கைது செய்யப்பட்டார். மேலும் ஒரு பெண் மற்றும் ஒரு பாதிரி உட்பட நான்கு பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. “காட்டில் அமைந்துள்ள அந்த விடுதிக்கு நாங்கள் சென்றபோது, மாணவர்கள் மிகவும் மோசமான நிலையில் இருப்பதைக் கண்டோம். கலந்துரையாடலின் போது, 6 முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் எட்டு மாணவிகள், வகுப்பறையில் தனியாக அழைத்து, தலைமை ஆசிரியரும், ஆசிரியரும் தங்களைத் தகாத முறையில் தொடுவதாகக் குற்றம் சாட்டினர். இது கடந்த பல ஆண்டுகளாக நடந்து வருவதாக சிறுமிகள் கூறினர். சில சிறுவர்களும் அவர்களுடன் துன்புறுத்தப்படுவதைத் தெரிவித்தனர். ஆனால் அவர்கள் அதிகம் வெளிப்படுத்தவில்லை” என்று எஸ்.சி.பி.சி.ஆர் உறுப்பினர் ஓம்கார் சிங் கூறினார். தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் (என்சிபிசிஆர்) தலைவர் பிரியங்க் கனூங்கோ, கோண்ட்வானா காந்தந்த்ரா கட்சியின் (ஜி.ஜி.பி) தலைவர் ராதேஷ்யாம் கோகாரியா குற்றவாளிகளைக் காப்பாற்ற முயற்சிப்பதாக குற்றம் சாட்டினார். மேலும், அக்கட்சித் தலைவர், குழந்தை செயற்குழுவின் (CWC) தலைவரை அச்சுறுத்தியதாகவும் அவர் கூறினார். மேலும், அவர் தனது டுவிட்டர் பதிவில், “குழந்தைகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான இந்த கல்வி நிறுவனம் அரசிடம் இருந்து நிதியுதவி பெறுகிறது. ஒரே வளாகத்தில் உள்ள நான்கு வெவ்வேறு விடுதிகளின் பெயரில் அரசுப் பணமும் பெறப்பட்டு குழந்தைகளின் பெர்றோரிடம் கட்டணமும் வசூலிக்கப்படுகிறது. குழந்தைகளின் உரிமைகளை துஷ்பிரயோகம் செய்யும் எவரும் சட்டத்தின்படி தண்டிக்கப்படுவார்கள். குற்றவாளிகளை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டு விசாரணையில் சிக்கல் மற்றும் தடைகளை உருவாக்குபவர்களும் குற்றவாளிகளாக கருதப்படுவார்கள். என்.சி.பி.சி.ஆர், குழந்தைகளின் உரிமைகளைப் பாதுகாப்பதை உறுதி செய்வதில் உறுதிபூண்டுள்ளது” என்று கனூங்கோ தெரிவித்தார்.