சமூக ஊடக பிரபலங்கள் பலரும், விளம்பர நிறுவனங்களிடம், இருந்து ஏராளமாக பணத்தைப் பெற்றுக் கொண்டு அந்த பொருள் அல்லது சேவை குறித்த எந்த அடிப்படை புரிதலும் போதுமான அனுபவ அறிவும் இல்லாமல், அவர்களின் செல்வாக்கைப் பயன்படுத்தி மக்களிடம் பிராண்ட் மார்க்கெட்டிங் செய்து வருகின்றனர். இதனால், அதிக விவரம் அறியாத அப்பாவி பொதுமக்களும், அந்த பிரபலங்களின் ரசிகர்களும் ஏமாந்து வருகின்றனர். சமூக ஊடக பிரபலங்களின் விளம்பரங்களை நம்பி கோடிக்கணக்கில் மக்கள் பணத்தை இழந்து வரும் செய்திகளை நாம் அவ்வப்போது செய்திகளில் பார்க்க முடிகிறது. இந்த சூழலில், முகநூல், இன்ஸ்டாகிராம், யூடியூப் போன்ற சமூக ஊடகப் பிரபலங்களுக்கு (Social Media Influencers) மத்திய அரசு சில விதிமுறைகளை உருவாக்கியுள்ளது. மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் (CCPA) சார்பில் கூறப்பட்டுள்ள வழிகாட்டு விதிமுறைகளில், ‘சமூக ஊடக பிரபலங்கள் மக்களை தவறாக வழிநடத்தும் விளம்பரங்களைக் செய்யக்கூடாது. பிரபலங்கள் ஒப்பந்தமாகும் அல்லது வெளியிடும் விளம்பரங்கள் குறித்த போதுமான அறிவையும், அந்த பொருள் அல்லது முதலீடு குறித்த தெளிவான விளக்கத்தையும் அவர்கள் முன்னதாகவே பெற்றிருக்க வேண்டும். போதுமான ஆராய்ச்சிகள் இல்லாமல், மக்களை ஏமாற்றும் முதலீடுகளைப் பற்றி ஊகத்தின் அடிப்படிடையில் விளம்பரங்களைச் செய்யக்கூடாது. விளம்பரம் செய்யும் பிராண்ட் குறித்த போதுமான அறிவும், அதில் நடிக்கும் பிரபலங்கள் முதலீடு செய்துள்ளார்களா என்பது குறித்தும் அறிவிப்பு வெளியிட வேண்டும். அப்படி சமூக ஊடக பிரபலங்கள் ஈடுபடாத எந்தவொரு திட்டம் அல்லது உபயோகப்படுத்தாத பொருட்களைப் பற்றி விளம்பரங்கள் செய்யக் கூடாது. முதலீடுகள் குறித்து வெளியிடும் விளம்பரங்களுக்கான முன்னெச்சரிக்கை தகவல்களை, மக்கள் நன்றாக பார்க்கும்படி எழுத்துக்களுடன் கூடிய வகையில் அதனை எளிய மக்களும் புரிந்து கொள்ளும் வகையில் வெளியிடப்பட வேண்டும். வீடியோ அல்லது பதிவுகளில் விளம்பரம் செய்யும் போது “advertisement” “AD” “sponsored” “collaboration” அல்லது “partnership” போன்ற வார்த்தைகள் கட்டாயம் இருக்க வேண்டும். இது Hash Tag விடிவிலோ அல்லது தலைப்புகளிலோ இருக்க வேண்டும்’ என கூறப்பட்டு உள்ளது. ஏற்கெனவே சென்ற ஆண்டு ஜூன் மாதம், மக்களை தவறாக வழிநடத்தும் விளம்பரங்களை கட்டுப்படுத்த வழிகாட்டு விதிமுறைகளை நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் வெளியிட்டது. அதில் இந்த விதிமுறைகளை மீறுவோருக்கு 10 லட்சம் ரூபாய் வரை 50 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படலாம் என தகவல் வெளியானது. ஆனால் இந்தமுறை தண்டனை மற்றும் அபராதம் குறித்த எந்த தகவல்களும் இதுவரை வெளியிடப்படவில்லை. என்ன தான் பிரபலங்கள் விளம்பரம் செய்தாலும், பொதுமக்களாகிய நாமும் ஒருமுறைக்குப் பலமுறை அது குறித்து சொந்தமாக ஆராய்ந்து, வல்லுனர்களுடன் கலந்தாலோசித்து, சரியான வழிகாட்டுதல்களை பின்பற்றி முடிவெடுப்பது தான் எப்போதுமே சிறந்தது.