கொரோனாவுக்கு ஆய்வகக் கசிவே காரணம்

உலகில் பல லட்சம் பேரை காவு வாங்கிய கொரோனா வைரஸ், முதன்முதலில் சீனாவின் வுஹானில் நவம்பர் 2019ல் பரவியது என்று நம்பப்படுகிறது. இதுவரை சுமார் 68.7 லட்சம் பேர் கொரோனாவால் இறந்ததாக அதிகாரபூர்வமாக கூறப்பட்டாலும் அது ஒரு கோடியை தாண்டும் என நம்பப்படுகிறது. சீனா, வடகொரியா போன்ற பல நாடுகள் உண்மைத் தகவல்களை வெளியிடவில்லை என்பதால் இது இன்னும் அதிகரிக்கலாம் என கருதப்படுகிறது. கொரோனா எப்போது தொடங்கியது என்பது குறித்து நிபுணர்கள் வெவ்வேறு கருத்துக்களைக் கொண்டுள்ளனர். இந்த வைரஸ் கடந்த காலத்தில் நடந்ததைப் போலவே விலங்குகளிடமிருந்து மனிதனுக்குத் பரவியது என்று ஆரம்பத்தில் கூறப்பட்டது. சீனாவின் வுஹான் மாகாணத்தில் உள்ள கடல் உணவு சந்தையில் இருந்து இந்த வைரஸ் தோன்றியதாக அனுமானங்கள் உள்ளன. ஆனால், காலப்போக்கில், கொரோனா வைரஸ் சீன ஆய்வக கசிவால் ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகத் துவங்கின. அதே வேளையில், தன்னை தற்காத்துக்கொள்ளும் விதமாக, சீனாவுக்கு வெளியே இந்த வைரஸ் தோன்றியதாக சீனா கூறியது. எனினும், உலக மக்கள் அதனை இன்றுவரை நம்பவில்லை. இந்த சூழலில், வால் ஸ்ட்ரீட் ஜர்னலின் அறிக்கையின்படி, அமெரிக்காவின் ஆற்றல் துறை, அதன் சமீபத்திய வகைப்படுத்தப்பட்ட உளவுத்துறை அறிக்கையில், கொரோணா தொற்றுநோய் பெரும்பாலும் சீன ஆய்வக கசிவிலிருந்து தோன்றியதாக முடிவு செய்துள்ளது. இந்த அறிக்கை வெள்ளை மாளிகை மற்றும் காங்கிரஸின் முக்கிய உறுப்பினர்களிடம் சமர்ப்பிக்கப்பட்டது. முன்னதாக, 2021ம் ஆண்டில் தேசிய புலனாய்வு இயக்குனர் அவ்ரில் ஹெய்ன்ஸ் அலுவலகத்தின் ஆற்றல் துறை அறிக்கை வைரஸின் தோற்றம் முடிவில்லாதது என்று கூறியது குறிப்பிடத்தக்கது. உளவுத்துறை சமூகத்தின் பல்வேறு அமைப்புகள், சீனாவில் உள்ள ஒரு ஆய்வகத்திலிருந்து தான் கொரோனா தொற்றுநோய் பரவியது என்று கூறிவரும் அதே வேளையில், அமெரிக்காவின் தேசிய புலனாய்வுக் குழு மற்றும் நான்கு பிற உளவு அமைப்புகள், இது இயற்கையான பரவல் என்று இன்னும் நம்புகின்றன. ஆற்றல்துறை மற்றும் பெடரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன் (எப்.பி.ஐ) மட்டுமே சீன ஆய்வகத்தில் ஏற்பட்ட கசிவு தான் கொரோனா தொற்றுநோய் பரவலுக்கு வழிவகுத்தது என கூறியுள்ளன. எனினும் இந்த அறிக்கை இன்னும் பகிரங்கப்படுத்தப்படவில்லை. இதனிடையே, சி.என்.என் செய்தி நிறுவனத்திடம் பேசிய அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன், “ஆற்றல் துறையின் ஒரு பகுதியாக இருக்கும் தேசிய ஆய்வகங்களை இந்த மதிப்பீட்டிற்குள் கொண்டு வருமாறு அதிபர் ஜோ பைடன் குறிப்பாகக் கோரினார். ஏனெனில் அவர் எந்தவொரு சாத்தியக்கூறையும் பயன்படுத்த விரும்புகிறார். கொரோனா தோற்றம், உண்மையில் என்ன நடந்தது என்று புலனாய்வு சமூகம் வெவ்வேறு கருத்துக்களைக் கொண்டுள்ளது. அவை போதுமான தகவல்களைக் கூறவில்லை” என்று கூறினார். எனினும் அவர் தற்போது வெளியாகியுள்ள இந்த புதிய தகவல்களை உறுதிப்படுத்தவோ அல்லது மறுக்கவோ இல்லை.