அதிர்ச்சி அளிக்கும் ஆர்.டி.ஐ தகவல்

பட்டியலின பழங்குடியினருக்காக செயல்படுத்தப்படும் ‘ஆதிதிராவிடர் துணைத்திட்டங்களுக்கு’ கடந்த 6 ஆண்டுகளில் தமிழக அரசு ஒதுக்கிய நிதியில் ரூ. 5,318 கோடி அளவுக்கு நிதி பயன்படுத்தவில்லை. குறிப்பாக கடந்த நிதியாண்டில் மட்டும் ரூ. 2,418 கோடி பயன்படுத்தப்படவில்லை என்று தெரியவந்துள்ளது. இது குறித்து மனு செய்து ஆர்.டி.ஐ மூலம் தகவல்களைப் பெற்றுள்ளார் மதுரையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் கார்த்திக். மாநிலத்தின் மொத்த திட்ட நிதியிலிருந்து தமிழகத்தின் ஆதிதிராவிடர் மக்கள் தொகைக்கு இணையாக 20.1 சதவீதம் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. ஆதிதிராவிடர் துணைத் திட்டத்தைச் செயல்படுத்த 48 துறைத் தலைமைகளை உள்ளடக்கிய 20 செயலாக்கத் துறைகள் வாயிலாக ஆதிதிராவிடர் மக்களின் மேம்பாட்டுக்காகத் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. கடந்த 2016 முதல் 2022  வரையிலான ஆறு நிதியாண்டுகளில் ஒதுக்கப்பட்ட நிதி, அந்த நிதியிலிருந்து திட்டங்களுக்குப் பயன்படுத்திய நிதி, பயன்படுத்தாமல் மீதமாக உள்ள நிதி விவரங்களைத் தகவல் பெறும் உரிமைச்சட்டத்தின் மூலம் அவர் பெற்றுள்ளார். அதில் கிடைத்தத் தகவல்களின்படி, கடந்த ஆறு ஆண்டுகளில் மொத்தம் ரூ. 75,930 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதில், ரூ. 70,969 கோடி வரை திட்டங்களுக்குப் பயன்படுத்தியது போக மீதம் ரூ. 5,318 கோடி வரை பயன்படுத்தாமல் அரசுத் துறைக்கே திரும்பச் சென்றுள்ளது. இதில் அதிகபட்சமாக கடந்த நிதியாண்டில் மட்டும் ரூ. 2,418 கோடி திரும்பச் சென்றுள்ளது என தெரிய வந்துள்ளது. ஆதிதிராவிடர் நல ஆணையர் கண்காணிப்பு அலுவலராக நியமிக்கப்பட்டும் கூட, இவ்வளவு பெரிய நிதி பயன்படுத்தாமல் இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிதி பிற துறைகளுக்குப் பகிர்ந்தளிக்கப்படுகிறதா என்ற கேள்வியும் எழுகிறது.  இதேபோல, நிகழும் நிதியாண்டிலும் ஆதி திராவிடர் துணைத் திட்டத்துக்கு ரூ. 16,442 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், அதில் கடந்த ஏப்ரல் முதல் டிசம்பர் வரை வெறும் ரூ. 5,976 கோடி மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது. மீதியுள்ள 3 மாதங்களில் ரூ. 10,466 கோடியை இதற்கான திட்டங்கள் தீட்டி செலவுசெய்ய முடியுமா என்பதும் சந்தேகமாகவே உள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.