துருக்கியில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத்தில் சிக்கி, பாதிக்கப்பட்டவர்களை மீட்கவும் சிகிச்சை அளிக்கவும் பாரதம் சார்பில், மீட்புப் படையினர் மருத்துவ அதிகாரிகள் அடங்கிய குழுவினர் உடனடியாக அந்நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். கூடவே அத்யாவசிய மருந்து பொருட்கள், உணவுப் பொருட்கள் எல்லாம் ஏராளமான அளவில் அனுப்பி வைக்கப்பட்டன. துருக்கியில் மீட்பு பணிகள் நிறைவடைந்த நிலையில், இந்த குழுவினர் பாரதம் திரும்பினர். இந்நிலையில், ராணுவ மருத்துவமனையின் லெப்டினன்ட் கர்னல் ஆதர்ஷ் சர்மா இதுகுறித்து பேசியபோது, “இந்த பேரிடரை எதிர்கொள்ளவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவவும் எங்களை உடனடியாக அனுப்பி வைக்கும் முடிவை உடனே எடுத்த அரசுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். எங்களது ராணுவ மருத்துவமனையை துருக்கியில் அமைத்து, உடனடியாக சிகிச்சை அளிக்க உத்தரவிடப்பட்டது. நாங்கள் அங்கு சென்றடைந்த ஒரு சில மணி நேரத்தில் தயாரானோம். சிகிச்சைக்காக கொண்டு வரப்பட்டவர்களுக்கு மருத்துவ உதவிகளை வழங்கினோம். எங்களது மருத்துவ பணியில் நாங்கள் சுமார் 3,600 நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தோம். சிறிய மற்றும் பெரிய அளவிலான அறுவை சிகிச்சைகளையும் செய்தோம். சரியான தருணத்தில் மருத்துவ சிகிச்சைளை மக்களுக்கு அளித்து, மக்களின் மனங்களில் இடம் பெற வேண்டும் என்ற அடிப்படையில் இத்திட்டம் செயல்பட்டது. அதனை நாங்கள் நிறைவேற்றியுள்ளோம் என்றே கருதுகிறேன். துருக்கியில் உள்ள நோயாளிகள் நன்றியுடையவர்களாக இருந்தனர். ஏனெனில், அந்நாட்டில் சுகாதார நல அமைப்பு அந்த அளவுக்கு சிறப்பாக இல்லை. அதனால், நமது நாட்டுக்கும், குழுவினருக்கும் அதிக நன்றியுடையவர்களாக துருக்கி மக்கள் காணப்பட்டனர். அவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளை சிறப்பாக வழங்கினோம்” என கூறினார்.