கன்னியாகுமரி மாவட்டம், மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் மாசி கொடைவிழா வரும் மார்ச் 5ம் தேதி தொடங்குகிறது. இந்தக் கோயில் கொடைவிழாவில் ஹைந்தவ சேவா சங்கம் சார்பில் கடந்த 85 ஆண்டுகளாக சமய மாநாடு நடைபெற்றுவருகிறது. இந்த ஆண்டு சமய மாநாட்டை ஹிந்து சமய அறநிலையத்துறையே நடத்தும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில், சமய மாநாடு சம்பந்தமாக ஹிந்து அமைப்பினர் ஆலோசனைக்கூட்டம் நாகர்கோவிலை அடுத்த பார்வதிபுரம் பி.எம்.எஸ் அலுவலகத்தில் நடைபெற்றது. ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின்னர் பா.ஜ.க மாவட்டத் தலைவர் தர்மராஜ், இந்து முன்னணி மாநில செயற்குழு உறுப்பினர் மிசா சோமன், வெள்ளிமலை ஹிந்து தர்ம வித்யாபீட தலைவர் சுவாமி சைதன்யானந்தஜி மஹராஜ், பி.எம்.எஸ் மாநிலச் செயலாளர் முருகேசன், ஆர்.எஸ்.எஸ் கிழக்கு மாவட்டத் தலைவர் ராஜாராம் ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய ஹிந்து தர்ம வித்யாபீட தலைவர் சுவாமி சைதன்யானந்தஜி மஹராஜ், “மண்டைக்காடு பகவதி அம்மன் ஆலய கொடைவிழாவில் 85 ஆண்டுக்கு முன்பிலிருந்தே ஹிந்து சமய மாநாடு நடந்துவருகிறது. ஹைந்தவ சேவா சங்கம் இலங்கத்து வேலாயுதம் பிள்ளையால் தொடங்கப்பட்டது. ஹிந்துக்களுக்கு சமய கருத்துகளைப் பரப்பவும், ஹிந்து ஒற்றுமைக்காகவும் இந்த மாநாடு நடத்தப்படுகிறது. இந்த மாநாட்டால் கன்னியாகுமரி மாவட்டத்தில் மதம் மாற்றம் செய்பவர்களுக்குத் தடை ஏற்படுகிறது. அதை விரும்பாத அமைச்சர் மனோ தங்கராஜ், கடும் முயற்சி செய்து, மாநாட்டைத் தடுக்க வேண்டும் எனத் தடை விதித்திருக்கிறார். அறநிலையத்துறையே மாநாட்டை நடத்தும் என்கிறார்கள். அதில் சுகி சிவம் உள்ளிட்டவர்களைப் பேசவைப்பதாகச் சொல்கிறார்கள். சுகி சிவம் இப்போது தி.மு.க உறுப்பினராக இருக்கிறார். அதனால் அவரை மாநாட்டில் பேச அழைத்திருப்பதாகச் சொல்கிறார்கள். ஹிந்துக்களிடம் ஒற்றுமையை ஏற்படுத்த ஹைந்தவ சேவா சங்கம் மாநாட்டை நடத்த வேண்டும். அனைத்து ஹிந்துக்களும் ஹைந்தவ சேவா சங்கம் சமய மாநாடு நடத்த வேண்டும் என விரும்புகின்றனர்.
அறநிலையத்துறை இந்த மாநாட்டை நடத்த கன்னியாகுமரி ஹிந்துக்கள் அனுமதிக்க மாட்டோம். மண்டைக்காட்டில் மீண்டும் கலவரத்தை ஏற்படுத்தும் விதமாக அதிகாரிகளும் அரசும் செயல்படக் கூடாது. மீண்டும் 1982 கலவர நிலைமைக்கு மாவட்டத்தைக் கொண்டு செல்லக் கூடாது. ஹைந்தவ சேவா சங்கம் மாநாட்டை நடத்த வேண்டும் என வேண்டி, வருகிற செவ்வாய்க்கிழமை (இன்று) மாலை 6 மணிக்கு அனைத்து மக்களும் வீதிக்கு வந்து அகல் விளக்கு ஏற்றி பகவதி அம்மனை வேண்டும் நிகழ்வு நடைபெறுகிறது. வரக்கூடிய வெள்ளிக்கிழமை மாலை 6:30 மணிக்கு அனைத்து ஊர்களிலும் மக்கள் கூடி இந்த வேண்டுதலுக்காகக் கூட்டுப் பிரார்த்தனை நடத்தவிருக்கிறோம். கூட்டுப் பிரார்த்தனைக்கு அம்மன் செவி சாய்ப்பாள். ஹைந்தவ சேவா சங்கம் அச்சிட்டிருக்கும் அதே நிகழ்ச்சி நிரல்படி, சமய மாநாட்டை நடத்த அனுமதிக்க வேண்டும். இந்த மாநாட்டில் பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை, தெலங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், தேவைப்பட்டால் மற்ற மாநில ஆளுநர்களும் அழைக்கப்பட இருக்கின்றனர். மண்டைக்காடு கொடைவிழா சமய மாநாட்டில் மத்திய அரசின் அமைச்சர்களும் வருவார்கள். அப்போது, குமரி மாவட்ட அரசு அதிகாரிகள் ஹிந்துக்களுக்கு விரோதமாகச் செயல்படுகிறார்கள் என நாடு முழுவதும் தெரியவரும். ஹிந்து சமய மாநாட்டில் அரசியல் பேசினால் அதனை அரசு கண்காணிக்கட்டும், தடுக்கட்டும், நாங்களும் ஒத்துழைக்கிறோம். வேறு மதம் பற்றி இழிவாகப் பேசினால் அரசு நடவடிக்கை எடுக்கட்டும். ஹைந்தவ சேவா சங்கம் ஆண்டுதோறும் நிதி தணிக்கை அறிக்கை கொடுத்துக் கொண்டுள்ளது. ஹைந்தவ சேவா சங்கம் பணம் வசூலித்து மோசடி செய்திருந்தால், அரசு நிதி தணிக்கை செய்யட்டும். பணம் மோசடி செய்ததாக நிரூபித்தால், நாங்கள் போராட்டம் நடத்தமாட்டோம். ஹைந்தவ சேவா சங்கம் மாநாடு நடத்த பத்தாயிரம் நோட்டீஸ் அச்சடித்திருக்கிறது. மாநாட்டுக்காகப் பந்தல்கால் நாட்டியிருக்கிறார்கள்” என கூறினார்.
அவரைத் தொடர்ந்து பேசிய பா.ஜ.க மாவட்டத் தலைவர் தர்மராஜ், “மண்டைக்காடு மண்டைக்காடாக இருக்கட்டும். தயவுசெய்து அதனை அயோத்தி ஆக்கிவிடாதீர்கள். இதுவரை மண்டைக்காட்டில் ஹைந்தவ சேவா சங்கம் மாநாடு நடத்தியதால் பதற்றம் ஏற்படவில்லை. ஆனால், தேவையில்லாமல் இந்தமுறை பதற்றத்தை ஏற்படுத்திவிடாதீர்கள். எங்கள் கோரிக்கைகளை தேவியிடம் சொல்லி பிரார்த்தனை செய்து பிரச்னையை முடிவுக்கு கொண்டுவர முயற்சி செய்கிறோம்” என்றார்.