ஹிந்துக்கள் மீதான வன்முறை

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் தனது முஸ்லிம் நண்பர்களுக்கு பாகிஸ்தானிய ரூபாய் 2,000 கடன் கொடுக்க மறுத்ததால் தௌலத் கோஹ்லி என்ற ஹிந்து மதத்தைச் சேர்ந்த ஒரு இளைஞர் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டுள்ளார். தௌலத் கோஹ்லிக்கு கடந்த பிப்ரவரி 8ம் தேதி தான் திருமணம் நடந்தது. பிப்ரவரி 11ம் தேதி மாலை 4 மணியளவில் தனது மனைவி மற்றும் தாயிடம் தனது நண்பர்களுடன் சில மணிநேரம் செலவிட வெளியே செல்வதாகக் கூறி தனது வீட்டை விட்டு வெளியே சென்றார். அப்போது தான் தௌலத் கோஹ்லி அவரது இரண்டு உள்ளூர் முஸ்லிம் நண்பர்களால் கொடூரமாக சித்ரவதை செய்து கொல்லப்பட்டார். 2 நாட்களாக காணாமல் போன தௌலத் கோஹ்லி, கிப்ரோ கிராமத்தில் உள்ள அவரது வீட்டின் அருகே உள்ள விவசாய வயலில் சடலமாக மீட்கப்பட்டார். தௌலத் கோஹ்லியின் உடல் கண்டெடுக்கப்படுவதற்கு குறைந்தது 12 மணி நேரத்திற்கு முன்பு அவர் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டுள்ளார். அதற்கு முன்பு அவர் கடுமையாக சித்திரவதை செய்யப்பட்டுள்ளார் என காவல்துறை அறிக்கை கூறுகிறது. அவரது குடும்பத்தினர், குற்றவாளிகள் மீது காவல்துறையில் வழக்குப் பதிவு செய்துள்ள போதிலும் இதுவரை குற்றவாளிகளை அழைத்து அவர்கள் விசாரணை செய்யவில்லை. பாகிஸ்தானில் உள்ள ஹிந்து, கிறிஸ்தவ மத சிறுபான்மையினர் மீது முஸ்லிம் பயங்கரவாதிகள், அரசியல்வாதிகள், நிலப்பிரபுக்கள் உள்ளிட்டோரின் கட்டுக்கடங்காத மிருகத்தனமான தாக்குதல்கள் மிகவும் ஆபத்தான வேகத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. பாகிஸ்தானில் ஹிந்துக்களுக்கு எதிரான சமீபத்திய குற்றச்செயல்கள், நாட்டில் சிறுபான்மையினருக்கு போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருப்பதாக அந்நாட்டு அரசு கூறிவருவதை சர்வதேச அரங்கில் பொய் என நிரூபிக்க போதுமானதாக உள்ளது.