டாடா குழுமம் துவங்கிய ஏர் இந்தியாவை வாங்கிய ஒரு வருடத்திலேயே அதன் வர்த்தகத்தை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்லத் துவங்கியுள்ளது. ஏர்பஸ் மற்றும் போயிங் நிறுவனங்களிடம் மொத்தம் 470 விமானங்களுக்கான கொள்முதல் ஒப்பந்தம் செய்து ஒட்டுமொத்த உலக நாடுகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இதுவரை பாரத விமானச் சேவை நிறுவனங்களால் செய்யப்பட்ட மிகப்பெரிய ஒப்பந்தம் இது என்பது மட்டுமில்லமல், உலகின் மிகப்பெரிய ஒற்றை விமான ஒப்பந்தமாகவும் உள்ளது. உலகிலேயே வேகமாக வளர்ந்து வரும் விமானப் போக்குவரத்துச் சந்தைகளில் பாரதமும் ஒன்று. அடுத்த 20 வருடங்களில் பாரதத்துக்கு சுமார் 2,210 புதிய விமானங்கள் தேவைப்படும் எனக் கணிக்கப்பட்டு உள்ளது. கடந்த பிப்ரவரி 14ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி, நாட்டின் வளர்ந்து வரும் விமானப் போக்குவரத்து சேவை துறைக்கு அடுத்த 15 ஆண்டுகளில் 2,000 விமானங்கள் தேவைப்படும் என்று கூறியிருந்தார் என்பது நினைவு கூரத்தக்கது. இந்நிலையில் ஏர் இந்தியாவுக்குப் போட்டியாக பாரதத்தின் பிற விமானச் சேவை நிறுவனங்களும் விமானங்களை வாங்க புதிய ஒப்பந்தகளை வெளியிட தயாராகி வருகின்றன. ஆஸ்திரேலியாவை சேர்ந்த விமானப் போக்குவரத்துத் துறை ஆலோசனை வழங்கும் நிறுவனமான சி.ஏ.பி.ஏ – விமானப் போக்குவரத்து மையம் (CAPA – Centre for Aviation) அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், அடுத்த இரண்டு வருடங்களில் இந்திய விமான நிறுவனங்கள் 1,500 முதல் 1,700 புதிய விமானங்களை வாங்க ஒப்பந்தம் செய்யும் எனத் தெரிவித்துள்ளது.
பாரதத்தின் மிகப்பெரிய விமானப் போக்குவரத்து சேவை நிறுவனமாக இருக்கும் இண்டிகோ, ஏற்கனவே 500 விமானங்களை வாங்க ஒப்பந்தம் செய்துள்ளது. புதிதாக விமானத்துறையில் கால் பதித்துள்ள ஆகாஷா ஏர் நிறுவனம், 72 போயிங் விமானங்களை வாங்க ஒப்பந்தம் செய்துள்ளது. இதில் 16 விமானங்கள் தற்போது சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. இதேபோல, கோ ஃபர்ஸ்ட் நிறுவனம் சுமார் 72 விமானங்களை வாங்க ஒப்பந்தம் செய்துள்ளது. டாடா குழுமத்தின் கீழ் இயங்கும் விஸ்தாரா 17 போயிங் விமானங்களுக்கு ஒப்பந்தம் வழங்கியுள்ளது. இப்படி சுமார் 1,115 விமானங்கள் வாங்க ஏற்கனவே ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ள நிலையில், இவ்வளவு விமானங்களையும், விமான தயாரிப்பு நிறுவனங்கள் தயாரித்து வழங்கவே சுமார் 5 வருடங்கள் ஆகலாம் என கருதப்படுகிறது. மத்திய அரசு, விமான நிலையங்களைச் சுமார் 90,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான முதலீட்டில் அடுத்த 5 வருடங்களில் மேம்படுத்த உள்ளது. உள்நாட்டு விமானச் சேவையை மேம்படுத்துவதிலும் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இந்த மேம்படுத்தும் திட்டத்தில் தனியார் விமான நிலைய நிறுவனங்களும், சிறிய நகரங்களை இணைக்கும் உடான் திட்டமும் ஈடுபட உள்ளது. இதனால் தற்போது ஒப்பந்தம் செய்யப்படும் விமானங்கள் அதிகளவில் 2ம் மற்றும் 3ம் நிலை நகரங்களை இணைக்க பயன்படுத்தப்படலாம். மேலும், மெட்ரோ நகரங்களுக்கு இடையேயான இணைப்பை மேலும் அதிகரிக்கவும் அதிக எண்ணிக்கையிலான விமானங்கள் பயன்படுத்தப்படலாம் என கருதப்படுகிறது. சீனா மற்றும் அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக மூன்றாவது பெரிய உள்நாட்டு விமானச் சந்தையாக பாரதம் திகழ்கிறது. பாரத மக்கள் தொகையில் சுமார் 4 சதவீதத்தினர் மட்டுமே அதிகமாக விமானப் பயணத்தைப் பயன்படுத்துகின்றனர். தற்போது இளம் தலைமுறையினர் மத்தியில் அதிகரித்து வரும் வருமானங்கள், நடுத்தர மக்களின் வலிமையான வளர்ச்சி போன்றவை குறைந்த கட்டண விமானச் சேவை அளிக்கும் விமான நிறுவனங்கள் மத்தியில் ஆரோக்கியமான போட்டியை உருவாக்கும். மேம்படுத்தப்பட்ட இணைப்பு மற்றும் உள்கட்டமைப்பு வளர்ச்சி ஆகியவை பாரதத்தில் விமானப் போக்குவரத்துத் துறையை பெரிய அளவில் மேம்படுத்தும் என நிபுணர்கள் கருதுகின்றனர்.