செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ) நம்பமுடியாத அளவிற்கு முன்னேறியுள்ளது என்பதை சாட் ஜி.பி.டி (ChatGPT) காட்டுகிறது. செயற்கை நுண்ணறிவு என்பது நாகரிகத்தின் எதிர்காலத்திற்கு மிகப்பெரிய ஆபத்துகளில் ஒன்று என்று தொழில்நுட்ப பில்லியனரான எலான் மஸ்க் எச்சரித்துள்ளார். ஐக்கிய அரபு எமிரேட்ஸின் துபாயில் நடந்த உலக அரசாங்க உச்சிமாநாட்டில் கலந்து கொண்ட அவரிடம், இப்போதிலிருந்து அடுத்த 10 ஆண்டுகளில் தொழில்நுட்பம் எவ்வாறு வளர்ச்சியடையும் என்று ஒரு கேள்வி கேட்கப்பட்டபோது அவர் இந்த எச்சரிக்கையை விடுத்தார். மேலும், “இது நேர்மறையானது அல்லது எதிர்மறையானது மற்றும் மிகச்சிறந்த வாக்குறுதி, சிறந்த திறன் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. ஆனால், அதனுடன் பெரிய ஆபத்தும் வருகிறது. சாட் ஜி.பி.டி ஏ.ஐ எவ்வளவு மேம்பட்டது என்பதை அது மக்களுக்கு விளக்கியுள்ளது. ஏ.ஐ சில காலமாக மேம்பட்டு வருகிறது. எனினும், பெரும்பாலான மக்களுக்கு அணுகக்கூடிய பயனர் இடைமுகம் அதில் இல்லை. கார்கள், விமானங்கள் மற்றும் மருந்துகளைப் போலல்லாமல், இந்த செயற்கை நுண்ணறிவுகளுக்கு அதன் வளர்ச்சியைக் கட்டுக்குள் வைத்திருக்க எந்த விதிமுறைகளும் சட்டங்களும் இல்லை. எனவே, நாம் இத்தகைய செயற்கை நுண்ணறிவு பாதுகாப்பை ஒழுங்குபடுத்த வேண்டும். கார்கள், விமானங்கள் அல்லது மருந்தை விட இது உண்மையில் சமூகத்திற்கு ஒரு மிகப்பெரிய ஆபத்து என்று நான் நினைக்கிறேன். ஆரம்பத்தில் இது ஒரு திறந்த மூலமாக, லாப நோக்கமற்றதாக உருவாக்கப்பட்டது. ஆனால், இப்போது அது மூடிய மூலமாகவும் லாப நோக்கம் கொண்டதாகவும் மாறிவிட்டது. என்னிடம் ஓப்பன் ஏ.ஐ நிறுவனத்தின் பங்குகள் ஏதும் இல்லை, நான் அதன் குழுவில் இல்லை, நான் அதை எந்த வகையிலும் கட்டுப்படுத்தவும் இல்லை. ஓப்பன் ஏ.ஐ உருவாக்குவதற்கான தனது முடிவின் ஒரு பகுதியாக, அதன் பாதுகாப்பில் கூகுள் நிறுவனம் போதுமான கவனம் செலுத்தவில்லை” என்று குறிப்பிட்டார். சி.என்.பி.சியின் கூற்றுப்படி, எலான் மஸ்க் ஓபன் ஏ.ஐயின் இணை நிறுவனர்களில் ஒருவராக இருந்தவர். இது பிரபலமான ஜெனரேட்டிவ் ஏ.ஐ சாட்போட், சாட் ஜி.பி.டியை உருவாக்கிய அமெரிக்க நிறுவனம். மஸ்க் 2018ல் இந்த ஓப்பன் ஏ.ஐ நிறுவனத்தின் இயக்குநர்கள் குழுவிலிருந்து விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.