மௌலானா மதானிக்கு வலுக்கும் எதிர்ப்பு

டெல்லியின் ராம் லீலா மைதானத்தில், கடந்த பிப்ரவரி 10 அன்று ஜமாத் உலாமா ஹிந்தின் 34வது மாநாடு 3 நாட்கள் நடைபெற்றது. இதன் இறுதி நாளில் அனைத்து மதத் தலைவர்களும் குருமார்களும் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டிருந்தனர். அதில் பேசிய தலைவர் மௌலானா ஹர்ஷத் மதானி, ‘உலகிலேயே பழமையான மதம் இஸ்லாம், அது பாரதத்தில் தோன்றியது. அல்லாவும், ஓம் இரண்டும் ஒன்றே. ராமரோ, பிரம்மரோ இல்லாத காலத்தில் மனு யாரை வணங்கி இருப்பார் என நான் மதகுருமார்களிடம் கேட்டேன். அதற்கு சிலர், அவர் ‘ஓம்’ எனும் உருவம் இல்லாததை வணங்கியிருப்பார்’ எனக் குறிப்பிட்டனர். இந்த ஓம் என்பதைத்தான் நாங்கள் அல்லா என்கிறோம். பாரசீக மொழியில் இதை ஃகுதா என்கின்றனர். ஆங்கிலத்தில் காட் என்று கூறுகின்றனர். அதேபோல, அல்லாவின் முதல் இறைத்தூதர் ஆதாம் ஆவார். இவரை ஹிந்துக்கள் மனு என்றும் கிறித்தவர்கள் ஆதாம் என்றும் அழைக்கின்றனர்” என கூறினார். அவரது இந்த கருத்துக்கு அங்கு வந்திருந்த மற்ற மதத் தலைவர்கள், கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மாநாட்டிலிருந்து வெளியேறினர். அதில் ஒருவரான ஜைன மதத் தலைவர் ஜெயின் முனி லோகேஷ், மேடையேறி தனது எதிர்ப்பை பதிவு செய்தார். இந்த விவகாரத்தில் ஹர்ஷத் மதானியுடன் தாம் பொது விவாதம் செய்யத் தயார் என அறிவித்துள்ளார்.

மேலும், இது குறித்து டுவிட்டரில் கருத்துப் பதிவிட்ட ஜெயின் முனி, “மௌலானா மதானி சொல்லும் கருத்தை நானும், எனது மத குருமார்களாலும் ஏற்க முடியாது. இதன்மூலம், மத நல்லிணக்கமும், ஒற்றுமையையும் குலைக்க முயற்சிக்கப்படுகிறது. ஓம், அல்லா, மனு அவர்களது பிள்ளைகள் என்பதெல்லாம் வீண் பேச்சு. இதைபோன்ற ஆயிரம் கதைகளை என்னாலும் கூற முடியும்’ என கண்டித்துள்ளார். சமூக ஊடகங்களிலும் மக்கள் இதனை ‘பிதற்றல்’ என கிண்டல் செய்து வருகின்றனர். பல முஸ்லிம் தலைவர்களும் கூட மௌலானா ஹர்ஷத் மதானியின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த சூழலில்,. மதானியின் கருத்துக்கு உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் பதில் அளித்துள்ளார். அதில் ”பாரதத்தின் ஒவ்வொரு குடிமகனும் ஹிந்து என்பதால், பாரதம் ஒரு ஹிந்து நாடு. ஏனெனில், ஹிந்து என்பது எந்த ஒரு மதத்தையும், சமூகத்தையும் குறிக்கும் சொல் அல்ல. ஹிந்து தேசத்தை எவராலும் தவிர்க்க முடியாது. ஹிந்து என்பதை ஜாதி, மதம் அடிப்படையில் புரிந்துகொள்ள முயல்வது சரியல்ல. பாரதம் தொடர்ந்து ஒரு ஹிந்து தேசமாகவே இருக்கும். ஒவ்வொரு பாரதக் குடிமகனும் அதன் அரசியலைமைப்பு சட்டத்தை உயரியதாக மதிக்க வேண்டும்” என கூறியுள்ளார்.