பாரதத்தால் தீர்வு காண முடியும்

பிரதமர் மோடியும், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மெக்ரானும் காணொலி காட்சி மூலம் சந்தித்து பேசினர். இந்த சந்திப்பில் ஏர் இந்தியாவுக்கு 250 விமானங்கள் வாங்கும் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அப்போது பேசிய இம்மானுவேல் மெக்ரான், “உக்ரைனுக்கு எதிரான ரஷ்ய போரால் எழுந்துள்ள தற்போதைய கடினமான சூழலுக்கு இடையே, தற்போது பாரதத்தின் ஜி20 தலைமைத்துவம் வெற்றி பெற நாங்கள் பங்காற்றி வருகிறோம். பிரதமர் மோடி தலைமையின் கீழ் இன்றைய பாரதம், முழு உலகையும் அணிதிரட்டக்கூடிய ஒன்றாகவும் நமக்கு முன்னால் உள்ள இந்த போர் பிரச்சனையை தீர்க்க நமக்கு உதவுவதாகவும் இருக்க முடியும். ஏர்பஸ் நிறுவனத்திடம் இருந்து 250 விமானங்களை வாங்கும் ஏர் இந்தியாவின் ஒப்பந்தம், பாரதம் பிரான்ஸ் இடையேயான ஆழமான உறவு மற்றும் நட்பில் விளைந்த மைல்கல் சாதனைகளில் ஒன்று. ஏர்பஸ் மற்றும் சப்ரான் உட்பட அதன் அனைத்து பங்காளிகளும் பாரதத்துடனான ஒத்துழைப்பின் புதிய பகுதிகளை உருவாக்க முழு அர்ப்பணிப்புடன் உள்ளன. விண்வெளி முதல் சைபர் வரை, பாதுகாப்பு முதல் கலாசாரம் வரை, ஆரோக்கியம் முதல் ஆற்றல் மாற்றம் வரை பல துறைகளில் பாரதத்துடன் நாங்கள் கைகோர்த்துள்ளோம். பாரதம் மற்றும் அதன் மக்களின் திறனை கருத்தில் கொண்டு, இன்னும் அதிக தூரம் செல்வதற்கான வரலாற்று வாய்ப்பு நமக்கு கிடைத்துள்ளது. பாரதத்துக்கு அதிநவீன, திறமையான தொழில்நுட்பங்களை வழங்குவதற்கும், பாரதத்தின் தயாரிப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக இருப்பதற்கும் பிரான்ஸ் உறுதியுடன் உள்ளது. அத்துடன் அணுசக்தி, குறைக்கடத்திகள், சைபர், பயோடெக் உள்ளிட்ட துறைகளில் ஒரு புதிய லட்சியத்தை உருவாக்கி வருகிறது” என கூறினார். அமெரிக்க வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளரும் பாரத்ம் உக்ரைன் ரஷ்ய பிரச்சனைக்கு பாரதம் தீர்வை கண்டால் வரவேற்போம் என சமீபத்தில் கூறியிருந்தது நினைவு கூரத்தக்கது.