திரிபுராவில் மீண்டும் பா.ஜ.க ஆட்சி

திரிபுரா சட்டப் பேரவையின் 60 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக 16 பிப்ரவரி 2023 அன்று தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலுக்கு முன்னதாக, ‘ஜன் கி பாத்’ நடத்திய கருத்துக்கணிப்பில், கடந்த 2018ல் திரிபுராவில் 25 ஆண்டுகால இடதுசாரி ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்த பா.ஜ.க, தற்போது அந்த மாநிலத்தில் நடைபெற உள்ள தேர்தலில் ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ளும் என கூறப்பட்டுள்ளது. திரிபுராவின் அனைத்து மாவட்டங்களிலும் 10,000 பேரிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், திரிபுரா மாநிலத்தில் மாணிக் சாஹா தலைமையிலான பா.ஜ.க மீண்டும் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்றும், இத்தேர்தலில் பா.ஜ.க 30 முதல் 35 இடங்களை பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2018ல் அங்கு ஆட்சியை பறிகொடுத்த சிபிஐ(எம்) அதன் கூட்டணிக் கட்சியான காங்கிரஸூம் சேர்ந்த் 13 முதல் 16 இடங்களை மட்டுமே பெறும். இதைத்தவிர திப்ராஹா பழங்குடியின முற்போக்கு பிராந்திய கூட்டணி (திப்ரா மோதா) 13 முதல் 11 இடங்களை பெறக்கூடும். மற்றவை ஒரு இடத்தை பெறலாம் என கருத்துக்கணிப்பு கூறுகிறது. வாக்கு சதவீத அடிப்படையில் பா.ஜ.கவுக்கு 39 முதல் 42 சதவீத வாக்குகள் கிடைக்கும். சிபிஐ(எம்) மற்றும் காங்கிரஸ் கூட்டணிக்கு 38 முதல் 41 சதவீத வாக்குகள் கிடைக்கும். பிரத்யோத் டெபர்மா தலைமையிலான திப்ரா மோதா 16 முதல் 21 சதவீத வாக்குகளும் பிற கட்சிகள் 1 முதல் 2 சதவீத வாக்குகளும் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் மக்கள்தொகை அடிப்படையில் அங்குள்ள 60 சதவீத வங்காளி ஹிந்துக்கள் பா.ஜ.க மீண்டும் அங்கு ஆட்சிக்கு வருவதை விரும்புகின்றனர். மாநிலத்தில் உள்ள 70 சதவீத வங்காளி முஸ்லிம்கள், சி.பி.ஐ (எம்), காங்கிரஸ் கூட்டணியை ஆதரிக்கின்றனர். பழங்குடியினரின் வாக்குகளைப் பொறுத்தவரை, திப்ரா மோதா அதிகபட்ச பங்கை கொண்டுள்ளது. திரிபுரி பழங்குடியினரில் 55 சதவீதம் பேர் மாநிலத்தில் ஆட்சியில் இருக்கும் பா.ஜ.க அரசுக்கு ஆதரவளிக்கின்றனர் என கருத்துக்கணிப்பு கூறுகிறது. முன்னதாக, ஜன் கி பாத் கருத்துக்கணிப்பு,திரிபுராவில் 2018ல் பா.ஜ.க ஆட்சி அமைக்கும் என்று கணித்திருந்தது குறிப்பிடத்தக்கது.