சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே உள்ள வடக்கு ரிஷபனூரைச் சேர்ந்தவர் ராமசாமி. இவர் டெல்லியில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் நிர்வாகியாகவும், தேசிய லோக் அதாலத் கமிட்டியின் உறுப்பினராகவும் பொறுப்பு வகித்து வருகிறார். பெரும்பாலும் இவர் டெல்லியில் உள்ள வீட்டில் வசிக்கும் சூழலில், சமீபத்தில் அவர் தனது சொந்த ஊரான விசவனூருக்கு வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 11ம் தேதி இரவு அவரது வீட்டில் அவர் தங்கினார். நேற்று (பிப்ரவரி 12) காலை எழுந்து பார்க்கும்போது வீட்டின் முன்பக்க கேட்டில் யாரோ சில சமூக விரோதிகள் சிலர் நாட்டு வெடிகுண்டை வீசிச் சென்றுள்ளனர். அதிர்ஷ்டவசமாக அது வெடிக்காத நிலையில் வீட்டின் முன்புறமாக கிடந்துள்ளது. இதனால் வீட்டின் ஜன்னல் கண்ணாடிகளில் மட்டும் உடைப்பு ஏற்பட்டுள்ளது. அந்த மர்ம நபர்கள் அவரது வீட்டின் சுவற்றில் கருப்பு மையையும் ஊற்றியுள்ளனர். வீட்டின் முன்புற கேட்டில் ஆங்காங்கே விடுதலை சிறுத்தைகள் கட்சிக் கொடியையும் சொருகிவிட்டு சென்றுள்ளனர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த ராமசாமி இது குறித்து சாலை கிராமம் காவல்துறைக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து காவல்துறை டி.எஸ்.பி சிபி சாய் சௌந்தர்யன், சாலை கிராமம் ஆய்வாளர் ராஜா, இளையான்குடி ஆய்வாளர் ராபர்ட் ஜெயின் மற்றும் காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இந்த சம்பவத்தினால் அப்பகுதியில் பெரும் பதட்டம் ஏற்பட்டது.