பல கோடி ரூபாய் மதிப்புடைய நிலக்கரி கடத்தல் வழக்கு தொடர்பாக கொல்கத்தா தொழிலதிபரிடமிருந்து 1.5 கோடி ரூபாய் ரொக்கத்தை மீட்டுள்ளதாக அமலாக்க இயக்குநரக அதிகாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து பேசிய பா.ஜ.கவின் மாநிலத் தலைவர் சுகந்தா மஜும்தார், அந்த தொழிலதிபர் முதல்வர் மமதா பானர்ஜியுடன் நேரடி தொடர்பு வைத்திருக்கிறார் என்று குற்றம் சாட்டினார். மேலும், “அமலாக்கத்துறை தனது செய்தியாளர்கள் சந்திப்பில், இரண்டு தொழிலதிபர்களைக் குறிப்பிட்டுள்ளது, அவர்களில் ஒருவர் ஜித்தி பாய் என்ற மஞ்சீத் சிங் கிரேவால். அவருடன் மமதா பானர்ஜி நேரடி தொடர்பு வைத்துள்ளார். மமதாவும் அவரது குடும்ப உறுப்பினர்களும் பல சந்தர்ப்பங்களில் அவரை சந்தித்துள்ளனர். மீட்கப்பட்ட பணம் மேற்கு வங்கத்தில் நிலக்கரி ஊழலுடன் தொடர்புடையது. நீதிமன்றத்தின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் அமலாக்கத்துறை மூலம் மீட்பு விசாரணை நடத்தப்பட வேண்டும், நிலக்கரி ஊழலில் ஈடுபட்ட அனைவரின் அடையாளத்தையும் வெளிப்படுத்த வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தார்.