நீதிபதியாக பதவியேற்ற விக்டோரியா கௌரி

விக்டோரியா கௌரி உள்ளிட்ட 5 பேரை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான கொலிஜியம் பரிந்துரைத்தது. இதனை ஏற்று அவர்களை நீதிபதிகளாக நியமிக்க மத்திய அரசு அனுமதி அளித்தது. இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக விக்டோரியா கௌரி பதவி ஏற்கக்கூடாது என அவரது நியமனத்துக்கு எதிராக மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. நீதிபதி சஞ்சீவ் கண்ணா, பி.ஆர். கவாய் அடங்கிய அமர்வு இவ்வழக்கை விசாரித்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், “தகுதி குறித்து எங்களால் எதுவும் சொல்ல முடியாது என்றே கருதுகிறோம். கொலீஜியத்திற்கு எங்களால் எதுவும் கூற முடியாது. கொலீஜியம் இந்த விஷயங்களைக் கணக்கில் கொண்டிருக்காது என்று கருத முடியாது” என்று கூறி மனுவைத் தள்ளுபடி செய்தனர். விக்டோரியா கௌரிக்கு எதிரான மனுக்களை தள்ளுபடி செய்தனர்.

இந்த வழக்கு விசாரணையின் போது நீதிபதி கண்ணா, “தகுதிக்கும் பொருத்தத்திற்கும் வித்தியாசம் உள்ளது. தகுதி குறித்து ஒருவர் மனு தாக்கல் செய்யலாம். ஆனால் பொருத்தமான நபரா என்று கேள்வி எழுப்ப முடியாது. அந்த கேள்வி எழுப்பப்பட்டால் முழு செயல்முறையும் குழப்பமாகிவிடும்” என்று தெரிவித்தார். “அரசியல் பின்னணியைப் பொறுத்தவரை எனக்கும் அரசியல் பின்னணி இருந்தது. இருப்பினும் அது எனது கடமைகளுக்குத் தடையாக இருந்தது இல்லை” என்று நீதிபதி கவாய் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து, திட்டமிட்டபடி விக்டோரியா கௌரி நேற்று காலை கூடுதல் நீதிபதியாக பதவியேற்றுக்கொண்டார். உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி. ராஜா அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.மற்ற நான்கு பேர் கூடுதல் நீதிபதிகளாக பதவியேற்றுக் கொண்டனர். முன்னதாக, நேற்று காலை ஐந்து பேரும் பதவி ஏற்க இருந்த நிலையில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. எனினும், பதவி ஏற்புக்காக அறிவிக்கப்பட்ட நேரத்திற்கு முன்பாகவே உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பை வழங்கிவிட்டதால் திட்டமிட்டபடி விக்டோரியா கௌரி உயர்நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றுக்கொண்டார்.