உலக பொருளாதார நிலை மற்றும் வாய்ப்புகள் என்ற தலைப்பில் ஐ.நா வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், பாரதத்தின் பொருளாதார வளர்ச்சி 2023ம் ஆண்டில் 5.8 சதவீதமாக இருக்கும் என தெரிவித்துள்ளது. மேலும், வளர்ந்த நாடுகளில் பொருளாதார மந்தநிலை உருவாவதற்கான அறிகுறிகள் தென்படத் துவங்கியுள்ளன. அந்த நாடுகளின் மத்திய வங்கிகளின் வட்டி விகிதங்கள் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது. இதனால் உலக அளவில் பொருளாதார வளர்ச்சியில் எதிர்மறையான தாக்கங்களை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம், சர்வதேச ஏற்றுமதி வளர்ச்சியில் பின்னடைவு உருவாகும். வேலைவாய்ப்புகள் பாதிக்கப்படும். பல்வேறு கடினமான சூழல்களால், 2024ம் ஆண்டில் நடைபெறும் சர்வதேச வர்த்தகத்தில் 0.4 சதவீத பின்னடைவு ஏற்படும். அப்போது உலக பொருளாதாரம் 1.9 சதவீதம் மட்டுமே வளர்ச்சி காணும். இந்த் சூழலில், உலகளவில் ஏற்படும் இத்தகைய பொருளாதார சுணக்க நிலையை கருத்தில்கொண்டு வரும் 2023ல் பாரதத்தின் பொருளாதார வளர்ச்சி 5.8 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இது, கடந்த 2022ல் கணிக்கப்பட்ட 6.4 சதவீத வளர்ச்சியை காட்டிலும் 0.6 சதவீதம் குறைவு. இருப்பினும், 2023 மற்றும் 2024 வருட காலகட்டத்தில் பாரதத்தின் வளர்ச்சிவிகிதம் 6 சதவீதமாக இருக்கும் என்ற முந்தைய மதிப்பீட்டில் மாற்றம் எதுவும் இல்லை என கூறப்பட்டுள்ளது.
இது குறித்து பேசிய ஐ.நா.வின் பொருளாதார மற்றும் சமூக விவகாரங்களுக்கான துறையின் பொருளாதார பகுப்பாய்வு மற்றும் கொள்கை பிரிவின் சர்வதேச பொருளாதார கண்காணிப்பு கிளை தலைவரான ரஷீத், “உலகின் மிக விரைவான வளர்ச்சி அடைந்து வரும் நாடுகளில் ஒன்று பாரதம். வரும் 2024ம் ஆண்டில் பாரதத்தின் பொருளாதார வளர்ச்சி 6.7 சதவீதமாக இருக்கும். இது பாரதத்தின் நீடித்த வளர்ச்சி விகிதம் ஆகும். இந்த வளர்ச்சி விகிதம் நீடிக்கும்போது, நீடித்த வளர்ச்சி இலக்குகளை அடைவதற்கு ஏற்ற ஒன்றாக இருக்கும். பாரதத்தின் வளர்ச்சி விகிதங்களுக்கு 3 காரணிகள் உள்ளன. அதன்படி, பாரதத்தின் வேலை வாய்ப்பின்மை சதவீதம் குறைந்துள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் 6.4 சதவீதம் என்ற அளவுக்கு அது குறைந்துள்ளது. அடுத்ததாக பாரதத்தின் பணவீக்க நெருக்கடியும் குறைந்துள்ளது. அது, நடப்பு ஆண்டில் 5.5 சதவீதமாகவும் 2024ல் 5 சதவீதம் ஆகவும் இருக்கும். மூன்றாவதாக முந்தின ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் பாரதத்தின் இறக்குமதி சார்ந்த செலவுகள் குறைந்து வருகின்றன. முக்கியமாக அதன் எரிபொருள் இறக்குமதி குறைந்துள்ளது. இந்த 3 காரணிகளால் கடந்த இரு ஆண்டுகளாக பாரதம் வளர்ச்சி பாதையில் சென்றுகொண்டுள்ளது” என குறிப்பிட்டார்.