தேசத்தை விட அரசியலா முக்கியம்?

தெலுங்கானாவில் கொரோனா பரவல் என்ற ஒரு போலி காரணத்தை காட்டி குடியரசு தின கொண்டாட்டம் மற்றும் அணிவகுப்பு ஊர்வலத்தை நடத்துவதற்கு அம்மாநில அரசு அனுமதி மறுத்தது. இதனை எதிர்த்து வழக்கறிஞர் கே. ஸ்ரீனிவாஸ் தாக்கல் செய்த பொதுநல வழக்கு மனுவை விசாரித்த நீதிபதி பி மாதவி தேவி தலைமையிலான உயர் நீதிமன்ற அமர்வு, குடியரசு தின கொண்டாட்டங்களை நடத்தாததற்கு மாநில அரசை கடிந்துகொண்டதுடன் வழக்கமாக குடியரசு தின நிகழ்ச்சி நடக்கும் பரேட் மைதானத்தில் குடியரசு தின விழாவை நடத்தவும், அணிவகுப்பை நடத்தவும் அதற்கான அனைத்து ஏற்பாடுகளை செய்யுமாறும் உத்தரவிட்டது. குடியரசு தினத்தை தகுந்த முறையில் கொண்டாடுவது அனைத்து அரசியல் சாசன அதிகாரிகளின் கடமை என்றும், அதை மாநில அரசு தவிர்க்க முடியாது என்றும் நீதிபதி தெரிவித்திருந்தார். எனினும், உயர்நீதிமன்றம் உத்தரவை மீறும் வகையில் அம்மாநில அரசு குடியரசு தின நிகழ்வு குறித்த எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டாக குடியரசு தின பாரம்பரியத்தை அம்மாநில அரசு மீறி வருவது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து 74வது குடியரசு தினத்தையொட்டி, ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தனது அதிகாரப்பூர்வ இல்லத்தில் மூவர்ணக் கொடியை ஏற்றினார். பிரகதி பவனில் குடியரசு தின விழா ஒன்றை தனியாக நடத்தி அதில் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் தேசியக் கொடியை ஏற்றினார்.ஆளுநருடன் அம்மாநில முதல்வர் கே சந்திரசேகர் ராவ் தேவையற்ற மோதல் போக்கை தொடர்ந்து கடைபிடித்து வருகிறார். தேசத்தை விட தனது மலிவான அரசியல் தான் முக்கியம் என்பதை வெளிப்படுத்தும் வகையில் சந்திரசேகர் ராவ் ராஜ்பவனில் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ஏற்பாடு செய்திருந்த குடியரசு தின விழாவில் கூட கலந்துகொள்ளாமல் புறக்கணித்தார். இது தெலுங்கானா மட்டுமில்லாமல் தேசமெங்கும் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.