தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம் கலை பண்பாட்டு இயக்கம் சார்பில் நடைபெற்ற பொங்கல் விழா, இசை சங்கமம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய தி.மு.கவின் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ ராசா, “தமிழகத்தில் பல அணைகளை கட்டியவர், பல பிரதமர்களை உருவாக்கியவர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்தவர் என்ற பெருமையெல்லாம் காமராஜருக்கு இருந்தாலும், அவர் தமிழ்நாடு என்ற பெயரை சொல்லவில்லை. அவருக்கு வீழ்ச்சி துவங்கியது. இன்று சிலர் சொல்ல மறுக்கிறார்கள் அவர்களுக்கும் வீழ்ச்சி துவங்கியுள்ளது” என்றார். இந்நிலையில், சென்னையிலுள்ள நாடார் சங்க நிர்வாகிகள் கூட்டம் தமிழ்நாடு நாடார் பேரவை தலைவர் என்.ஆர்.தனபாலன் தலைமையில் அசோக்நகர் என்.ஆர்.டி.டவரில் நடந்தது. அதில், பெருந்தலைவர் காமராஜர் குறித்து தவறாக பேசிய தி.மு.க. எம்.பி. ஆ.ராசாவுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ‘பெருந்தலைவர் காமராஜர் பற்றி பேசுவதற்கு இன்றைய தி.மு.க. நிர்வாகிகள் யாருக்கும் தகுதியோ, அருகதையோ இல்லை என்பதால் காமராஜர் பற்றி பேசுவதை தி.மு.க. நிர்வாகிகள் நிறுத்திக்கொள்ள வேண்டும். பொய்யான தகவல்களை பொது மேடைகளில் பேசி அதை மெய்யாக்கி முந்தைய வரலாற்றை மாற்றி தங்கள் தான் உத்தமர்கள் போன்ற மாயையை பரப்பும் தி.மு.கவினரின் முகமுடியை கிழித்தெறிய வேண்டும் அனைத்து கட்சியினரையும் கேட்டுக்கொள்கிறோம். காமராஜர் பற்றி பொய்யான கருத்துக்களை பரப்பிவரும் ஆ. ராசா பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். தவறும் பட்சத்தில் அவரது வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம். அவர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் அவருக்கு எதிராக கருப்பு கொடி ஆர்ப்பாட்டமும் நடத்துவோம். தொடர்ந்து கர்மவீரர் காமராஜரின் வரலாற்றை திரித்து தவறுதலாக பேசி வரும் தி.மு.க நிர்வாகிகள் மீது அதிருப்தி கொண்டுள்ள பெருந்தலைவர் தொண்டர்களும், பக்தர்களும் ஒருபோதும் தி.மு.கவை மன்னிக்க மாட்டார்கள். தமிழகம் முழுவதும் தி.மு.கவிற்கு எதிராக சுவரொட்டிகள் ஒட்டப்படும்’ என்று கூட்டத்தில் தீர்மானம் முன்மொழியப்பட்டது.