ஜனம் தொலைக்காட்சி ஜனனம்

தமிழகத்தில் சார்பு ஊடகங்கள் கோலோச்சி வரும் நிலையில், மக்களுக்கு செய்திகளை உள்ளது உள்ளபடிச் சொல்ல, ‘ஜனம்’ என்ற தமிழ் செய்தி தொலைக்காட்சி புதிதாக துவக்கப்பட உள்ளது. இதுகுறித்து அந்நிறுவனத்தின் அமைப்பாளர்கள் விடுத்துள்ள செய்தியில், “மக்களுக்கு செய்திகளைத் தெரியப்படுத்துவது ஊடகத்தின் கடமை. அதுவும் உண்மையான செய்திகளை நடுநிலையுடன் சொல்வது தான் சிறந்த ஊடகத்தின் இலக்கணம். அந்த வகையில், தமிழக மக்களுக்காக, உதயமாகிறது ஜனம் தமிழ்  செய்தித் தொலைக்காட்சி. தேசியமும் தெய்வீகமும் பின்னிப் பிணைந்த மண் தமிழகம். பாரத கலாசாரத்திலும், தேசிய உருவாக்கத்திலும் பேரிடம் வகித்த மாநிலம் தமிழகம். சுதந்திரப் போராட்டத்தில் அளித்த மிகச் சிறந்த பங்களிப்பு போலவே, தற்போதைய தேச முன்னேற்றத்திலும் தமிழகம் அச்சாணியாக இருந்து வருகிறது. இத்தகைய தமிழக நலனுக்காக ஜனம் தமிழ்  செய்தி என்ற தொலைக்காட்சியை அறிமுகம் செய்வதில் மகிழ்கிறோம்.

செய்தியை உள்ளது உள்ளபடிச் சொல்ல வேண்டும். அரசியல் உள்நோக்கமின்றி, துலாக்கோல் போல சமச்சீரான நடையில் செய்திகளை மக்களின் வாழ்க்கைக்கு உறுதுணையாக இருக்கும் வகையில் அளிப்பதே சிறந்த ஊடகமாக இருக்க முடியும். அதுவும் நாட்டுநலனுக்கு ஊறு விளைவிக்காத வகையில், மொழியும் பண்பாடும் சிதைவுறாத வண்ணம் செயல்படுவது நல்ல ஊடகத்தின் கடமை. அந்தக் கடமையை நிறைவேற்றும் விதமாக ஜனம் தமிழ் செய்தி தொலைக்காட்சி  செயல்படும்.

ஏற்கனவே அண்டை மாநிலமான கேரளத்தில் மலையாளத்தில் செயல்பட்டுவரும் ஜனம் டி.வி. தற்போது, 8 கோடி தமிழர்களுக்காக, உலகின் மூத்த மொழியான தமிழில் தனது பணியைத் தொடங்குகிறது. நமது மாநிலத்தின் தொன்மை, பண்பாடு, மொழிவளம், ஆன்மிகச் சிறப்பு, கலைகள், அரசியல், அன்றாட நிகழ்வுகள், தொழில்வளம், வர்த்தகம், இளைஞர் நலன், மகளிர் முன்னேற்றம் ஆகியவற்றை முறையாகப் பதிவு செய்வதிலும், இம்மாநிலத்தை மேலும் மேம்படுத்துவதிலும் ஜனம் தமிழ் செய்தி தொலைக்காட்சி தன்னை அர்ப்பணித்துக் கொள்கிறது.

தமிழில் ஏற்கனவே பல செய்தி தொலைக்காட்சிகள் உள்ள நிலையில் இளமைத் துடிப்புடன் களம் புகிறது ஜனம் தமிழ் செய்தி தொலைக்காட்சி எங்களுக்கே உரித்தான தனித்தன்மை, தொழில் நேர்த்தி, மக்கள் நலக் கண்ணோட்டம், நடுநிலைமையுடன் ஜனம் தமிழ் செய்தி தொலைக்காட்சி செயல்படும் என உறுதி அளிக்கிறோம்.  விறுவிறுப்பான செய்தியாளர்களோடு விவேகத்தோடு வீரத்தோடு வீடுகள் தோறும் ஜனம் தமிழ் செய்தி தொலைக்காட்சியின் ஜனனம் இதனை ஆதரித்து எங்கள் தேசியக் கடமைக்கு உறுதுணையாக இருக்குமாறு அனைவரையும் கேட்டுக் கொள்கிறோம்’ என தெரிவித்துள்ளனர்.