எம்.எல்.ஏ உயிருக்கு அச்சுறுத்தல்

டெல்லியில் உள்ள ரித்தாலாவைச் சேர்ந்த ஆம் ஆத்மி கட்சி சட்டமன்ற உறுப்பினரான மொஹிந்தர் கோயல், டெல்லி சட்டப்பேரவையில் பேசுகையில், டெல்லியின் ரோகினி பகுதியில் உள்ள டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கர் மருத்துவமனையில் செவிலியர் பணி நியமனத்தில் ஊழல் நடந்ததாக குற்றம் சாட்டினார். ஒப்பந்ததாரர்கள் தனக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக கூறி தனக்கு கொடுக்கப்பட்ட பணத்தை சட்டசபையில் காட்டினார். “நான் காட்டிய பணம் எனக்கு லஞ்சமாக கொடுக்கப்பட்டது. ரூபாய் 3 லட்சம் முன்பணமாக வழங்கப்பட்டது. ஜனவரி 5 முதல் இந்த ஊழல் பிரச்சினையை நான் எழுப்பி வருகிறேன். நான் காவல்துறை மற்றும் துணை நிலை ஆளுநரிடம் புகார் செய்தேன். ஒப்பந்தக்காரர்கள், என்னுடன் ஒரு ஒப்பந்தம் செய்ய முயன்றனர். டி.சி.பி’யிடம் புகார் அளித்தும், அதற்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனது புகாரின் மீது டெல்லி சட்டசபை நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறேன். என்னை அமைதிப்படுத்த முயற்சிக்கும் சக்தி வாய்ந்த நபர்களால் எனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. எனக்கு பாதுகாப்பு வேண்டும்” என கூறினார். இச்சம்பவம் டெல்லி சட்டசபையில் பரபரப்பை ஏற்படுத்தியது.