தமிழக அரசுத்துறைகளில் பட்டியலின பழங்குடியின வகுப்பினருக்கான 10,402 காலிப்பணியிடங்களை 3 மாதங்களில் நிரப்ப வேண்டும் என்று பட்டியல் வகுப்பினருக்கான தேசிய ஆணையத்தின் துணைத்தலைவர் அருண் ஹல்தார் அறிவுறுத்தியுள்ளார். இதில், ஆயத்தீர்வைத் துறை, உள்துறை ஆகியவற்றில் அதிகபட்சமாக 6,841 பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும், எரிசக்தித்துறையில் 228 பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும் கூறிய அவர், இதற்கான பணிகளை விரைந்து மேற்கொள்வதாக தமிழக அரசின் ஆதிதிராவிடர் நலத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் டி.எஸ். ஜவஹர் உறுதி அளித்திருப்பதாக தெரிவித்தார். மேலும், இதுகுறித்து நடத்தப்பட்ட ஆய்வுக்கூட்டத்தில் பட்டியல் வகுப்பினருக்கு எதிரான 13 சம்பவங்கள் பற்றி விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இவற்றில் 10 சம்பவங்களுக்கு சுமூகதீர்வு காணப்பட்டது. மற்ற 3 சம்பவங்கள் தொடர் விசாரணைக்கு அனுப்பப்பட்டுள்ளது என அவர் கூறினார். புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவாசல் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை அளிக்குமாறு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், மாவட்ட ஆட்சியர் ஆகியோருக்கு உத்தரவிட்டு பட்டியல் வகுப்பினருக்கான தேசிய ஆணையம் தாமாக முன்வந்து நோட்டீஸ் அனுப்பியிருப்பதாக அருண் ஹல்தார் கூறினார்.