காங்கிரசின் தேசப்பற்று

பிரதமர் நரேந்திர மோடியின் ‘வசுதைவ குடும்பம்’ முயற்சியின் கீழ் பாரதம் ‘உலகின் மருந்தகமாக’ உருவெடுக்கத் தொடங்கியதை பொறுத்துக்கொள்ள முடியாத காங்கிரஸ் கட்சியும் சில இடதுசாரி அறிவுஜீவிகளும் பாரதத்தின் பெயரை கெடுக்க ஒரு வாய்ப்பைத் தேடி வருகின்றனர். அவ்வகையில், சமீபத்தில் நொய்டாவை சேர்ந்த மரியன் பயோடெக் தயாரித்த டாக் 1 மேக்ஸ் என்ற இருமல் மருந்தை உட்கொண்ட 18 குழந்தைகள் இறந்ததாக உஸ்பெகிஸ்தான் சுகாதார அமைச்சர் தெரிவித்த செய்தியை அவர்கள் அரசியலாக்க முயற்சிக்கின்றனர். “பாரதத்தில் தயாரிக்கப்பட்ட இருமல் சிரப்கள் கொடியதாகத் தெரிகிறது. முதலில், காம்பியாவில் 70 குழந்தைகளின் மரணம், இப்போது உஸ்பெகிஸ்தானில் 18 குழந்தைகள். பாரதத்தை ஒரு மருந்தகம் என்று உலகுக்குப் பெருமையாகப் பேசுவதை மோடி அரசு நிறுத்திவிட்டு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என. காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார். அவருக்கு பதில் அளித்த பா.ஜ.க தலைவர் அமித் மால்வியா, “பிரதமர் மோடி மீதான வெறுப்பின் காரணமாக, காம்பியா வழக்கில் இருமல் சிரப்கள் நன்றாக இருப்பதாக பின்னர் அறிவிக்கப்பட்ட நிலையிலும் உஸ்பெகிஸ்தான் இறப்புகளை காம்பியா இறப்புகளுடன் காங்கிரஸ் இணைத்துள்ளது” என்றார். உஸ்பெகிஸ்தானில் நடைபெற்ற இந்த விவகாரம் தொடர்பாக மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு (சி.டி.எஸ்.சி.ஓ) உடனடியாக விசாரணையைத் தொடங்கியுள்ளது. இந்த குறிப்பிட்ட சிரப் தற்போது பாரத சந்தையில் விற்கப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், காம்பியா சம்பவத்தில், காம்பிய அரசு நிர்வாகம், குழந்தைக்ள் இறப்புக்கும் பாரதத்தில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்துகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கூறியுள்ளது. நமது நாட்டின் மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பின் ஆய்வுகளும் இதனை உறுதிப்படுத்தின என்பது குறிப்பிடத்தக்கது.