2036ல் ஒலிம்பிக்கை நடத்த முயற்சி

செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்த மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர், “2036ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை நடத்த பாரதம் முயற்சிக்கும். செப்டம்பர் 2023ல் மும்பையில் நடைபெறும் அமர்வின் போது சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் (ஐ.ஓ.சி) உறுப்பினர்களுக்கு முன் அரசு இதற்கான ஒரு திட்டத்தை முன்வைக்கும். இந்திய ஒலிம்பிக் சங்கத்துடன் (ஐ.ஓ.ஏ) கலந்து ஆலோசித்து இதற்கான விரிவான திட்டம் தயாரிக்கப்படும். ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்கான இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் முயற்சியை மத்திய அரசு ஆதரிக்கும். 2032ம் ஆண்டு வரை ஒலிம்பிக் நடத்தும் நாடுகள் ஏற்கனவே முன்பதிவு செய்யப்பட்டுள்ளன என்பதை நாம் அனைவரும் அறிவோம். ஆனால் 2036ல் நாம் நடத்த முடியும் என எங்களுக்கு நம்பிக்கை உள்ளது, பாரதம் ஒலிம்பிக்கிற்கு முழுமையாக தயாராகி இதில் பங்கெடுக்கும் என்று நான் நம்புகிறேன். ஜி 20 தலைமை பாரதம் வெற்றிகரமாக நடத்த முடியும் என்ற சூழலில், ஒலிம்பிக் போட்டிகளையும் நம்மால் வெற்றிகரமாக நடத்த முடியும். நாடு தயாராகவே உள்ளது, நமக்கான வாய்ப்பை மறுக்க எந்த காரணமும் இல்லை. விளையாட்டை ஊக்குவிப்பதில் பாரதம் அதிக முயற்சி எடுத்து வருகிறது. நம்மால் ஒலிம்பிக்கை பிரமாண்டமாக நடத்த முடியும். விளையாட்டுகளை நடத்த இதுவே சரியான நேரம். உற்பத்தித் துறை முதல் சேவைகள் வரை ஒவ்வொரு துறையிலும் பாரதம் சாதனைகளை உருவாக்கி வரும் இக்காலகட்டத்தில் விளையாட்டில் அது ஏன் முடியாது? 2036 ஒலிம்பிக்கிற்கான ஏலத்தை பாரதம் மிகவும் தீவிரமாகப் பார்க்கிறது. குஜராத்தில் ஏற்கனவே உலகத்தரம் வாய்ந்த விளையாட்டு உள்கட்டமைப்பு உள்ளது. அகமதாபாத் விளையாட்டுப் போட்டிகளை நடத்தும் நகரமாக இருக்கும்” என்று நம்பிக்கை தெரிவித்தார்.