வரலாற்றின் திருத்தப்பட்ட பதிப்பு

இந்திய வரலாற்று ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.ஹெச்.ஆர்) மற்றும் அகில பாரதிய இதிகாச சங்கலன் யோஜனா அமைப்பு இணைந்து ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பேசிய மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான், “தேசிய கல்விக் கொள்கை திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் உள்ள மாணவர்களுக்கு ஜனவரி 26ம் தேதி முதல் பாரத வரலாற்றின் திருத்தப்பட்” பதிப்பு கற்பிக்கப்படும். 21ம் நூற்றாண்டில் பாரதத்தின் பண்டைய கலாச்சாரம் மற்றும் நாகரீகத்திற்கு நாம் ஒரு புதிய உலகளாவிய கண்ணோட்டத்தை வழங்க வேண்டும். புதிய தொகுப்புகளுடன் புத்தகங்கள் மீண்டும் வெளியிடப்பட்டு வருகின்றன. இந்த புத்தகங்கள் டிஜிட்டல் முறைகளிலும் கிடைக்கும். இந்த புத்தகங்கள் பாரதத்தைப் பற்றிய தெளிவை உலகுக்கு அளிக்கும். இந்த கல்விக் கொள்கையில், இதில், தாய்மொழிக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. கல்வி கற்பித்தல் தாய்மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் இருப்பது அர்த்தமற்றது. ஜி 20 தலைமைப் பதவி பாரதத்திற்கு அதன் பாரம்பரியத்தை உலகிற்கு வழங்க ஒரு பொன்னான வாய்ப்பை வழங்குகிறது. நாம் ஜி 20’ஐ ஒரு கொண்டாட்டமாகவும், பாரதத்தின் கலை, கலாச்சாரம் மற்றும் நாகரிகத்தை உலகிற்கு வெளிப்படுத்தும் வாய்ப்பாகவும் மாற்ற வேண்டும்” என்று கூறினார். பீகார் மாநிலம் சசரம் மாவட்டத்தில் உள்ள ஜமுகாரில் உள்ள கோபால் நாராயண் சிங் பல்கலைக்கழகத்தில் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஹிமாச்சல பிரதேச மத்திய பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் சத்யபிரகாஷ் பன்சால் உட்பட பல அறிஞர்கள் கலந்து கொண்டனர்.