டெல்லியில் உள்ள மேஜர் தயான் சந்த் தேசிய மைதானத்தில் இன்று மதியம் 12:30 மணிக்கு ‘வீர் பால்’ தினத்தையொட்டி நடைபெறவுள்ள வரலாற்று சிறப்புமிக்க நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார். நிகழ்ச்சியின் போது, சுமார் முன்னூறு சிறார்கள் பங்கேற்று கீர்த்தனைகள் பாடும் ‘ஷபத் கீர்த்தனை’யிலும் பிரதமர் கலந்து கொள்கிறார். இந்த முக்கிய நிகழ்வில், சுமார் மூவாயிரம் குழந்தைகள் பங்கேற்கும் அணிவகுப்பையும் பிரதமர் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். சாஹிப்ஜாதாக்களின் தீரம் மற்றும் தைரியத்தின் கதையைப் பற்றி மக்களுக்கு, குறிப்பாக சிறார்களுக்கு தெரிவிக்க, நாடு முழுவதும் கலந்துரையாடல் மற்றும் பங்கேற்பு நிகழ்ச்சிகளுக்கு அரசு ஏற்பாடு செய்து வருகிறது. நாடு முழுவதும் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளில் கட்டுரை போட்டிகள், வினாடி வினா போட்டிகள் மற்றும் பிற நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்படும். ரயில் நிலையங்கள், பெட்ரோல் விற்பனை நிலையங்கள், விமான நிலையங்கள் போன்ற பொது இடங்களில் டிஜிட்டல் கண்காட்சிகள் அமைக்கப்படும். நாடு முழுவதும், சாஹிப்ஜாதாக்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் தியாகத்தை விவரிக்கும் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்படும். ஸ்ரீ குரு கோவிந்த் சிங் ஜியின் பிரகாஷ் பூரப் தினமான இந்த ஆண்டு ஜனவரி மாதம் 9ம் தேதி, ஸ்ரீ குரு கோவிந்த் சிங்கின் மகன்கள் சாஹிப்ஜாதாஸ் பாபா ஜோராவர் சிங் மற்றும் பாபா ஃபத்தே சிங்கின் தியாகத்தைக் குறிக்கும் வகையில் டிசம்பர் 26ம் தேதி ‘வீர் பால் திவஸ்’ ஆக அனுசரிக்கப்படும் என்று பிரதமர் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.