ஒரு மாநிலத்தை நடத்துவதற்கு, திறமையான நிர்வாகம், புதிய முதலீடுகள் ஈர்ப்பு, ஊழலற்ற நேர்மையான அரசு நிர்வாகம், தொழில்துறையினருக்கு தேவையான வசதிகளை அதிகரிப்பது, வேலைவாய்ப்பு பெருக்கம், உள்கட்டமைப்புகள் விரிவாக்கம் என செயல்படுவது தான் மாநில அரசுகளின் வழக்கம். ஆனால், இடதுசாரிகள் ஆளும் கேரள அரசின் சமீபத்திய நடவடிக்கைகளை பார்க்கும்போது அது கடன் வாங்குவதை மட்டுமே நம்பி செயல்பட்டு வருகிறதோ என்ற அச்சம் எழுந்துள்ளதாக அம்மாநில மக்கள் தெரிவிக்கின்றனர். காரணம், கேரள அரசு, அடுத்த மாத சம்பளம் மற்றும் ஓய்வூதியம் வழங்குவதற்காக புதிதாக 1,500 கோடி ரூபாய் கடன் வாங்க முடிவு செய்துள்ளது. அபிவிருத்தி நடவடிக்கைகள் என்ற பெயரில் இந்த கடன் வாங்கப்படுகிறது. இந்த கடன் பத்திரங்களின் ஏலம் டிசம்பர் 27 அன்று மும்பை கோட்டையில் உள்ள இந்திய ரிசர்வ் வங்கியின் அலுவலகத்தில் இ குபேர் போர்ட்டல் மூலம் நடைபெறும். முன்னதாக, கடந்த நவம்பர் மாதத்திலும், அந்த மாதத்திற்கான சம்பளம் மற்றும் ஓய்வூதிய திட்டங்களுக்காக அம்மாநில அரசு ரிசர்வ் வங்கியின் கடன் பத்திரங்கள் மூலம், 2,000 கோடி ரூபாய் கடன் வாங்கியுள்ளது. 7.83 சதவீத வட்டி விகிதத்தில் 23 ஆண்டுகள் திருப்பிச் செலுத்தும் காலத்துடன் இந்த கடன் வாங்கப்பட்டது. தற்போதைய நிலவரப்படி, மாநிலத்தில் 55 லட்சம் தனிநபர்கள் தலா ரூ.1,600 நல ஓய்வூதியம் பெறுகின்றனர். மாநிலத்தில் ஒவ்வொரு மாதமும் இந்த நலத்திட்ட ஓய்வூதியங்களை விநியோகிக்க சுமார் 774 கோடி ரூபாய் தேவைப்படுகிறது. அரசு ஊழியர்களுக்கு சம்பளம் மற்றும் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவதற்கே நீண்ட காலமாக கேரள அரசு போராடி வரும் சூழலில், இந்த நலன்புரி ஓய்வூதிய திட்டம், அந்தச் சுமையை மேலும் கூட்டுவதாக உள்ளது என அரசு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.