நானும் என் மனைவியும் கிறிஸ்தவர்கள்தான்

திராவிடர் கழகத்தினரும், பெரும்பாலான தி.மு.க.வினரும் ஹிந்துக்களையும், ஹிந்து கடவுள்களையும், ஹிந்து மத சடங்குகளையும் மட்டும் சிறுமைபடுத்துவதையே தங்கள் வழக்கமாக வைத்திருக்கின்றனர். அவர்களின் கூட்டணியில் உள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோரும் இதேபோல செயல்படுகின்றனர். தி.மு.கவிலும் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளில் இருப்பவர்கள் பலரும்  ஹிந்துக்களின் வாக்குகளை பெறுவதற்காக ஹிந்துக்களை போல நடிக்கின்ற கிறிப்டோ கிறிஸ்தவர்கள் தான் என்ற சர்ச்சையும் பலகாலமாக உண்டு. சில நேரங்களில் அது மெய்ப்பிக்கப்பட்டதும் உண்டு. திருமாவளவனின் அக்கா இறந்தபோது செய்யப்பட்ட ஈமச்சடங்குகள், ஆ.ராசாவின் மனைவி இறந்தபோது செய்யப்பட்ட இறுதி காரியங்கள் போன்றவை அக்கட்சியின் தொண்டர்களுக்கே சந்தேகத்தை ஏற்படுத்தியது.

இந்த சூழலில், கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, சென்னை துறைமுகம் தொகுதியில் கிறிஸ்துமஸ் விழா மற்றும் 2,000 குடும்பங்களுக்கு புத்தாடைகள், மளிகைப் பொருட்கள் அடங்கிய பரிசுத் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய உதயநிதி ஸ்டாலின், “திராவிட மாடல் என்றால் என்ன என்று எல்லோரும் கேட்கிறார்கள். ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக இருக்கும் சேகர்பாபு, எப்போதுமே மாலையும் கழுத்துமாகத்தான் இருப்பார். ஆனால், கிறிஸ்தவ நிகழ்ச்சிகளுக்கும் செல்வார்.இதோ தற்போது இந்த கிறிஸ்துமஸ் விழாவில் கலந்துகொண்டு “அல்லேலூயா” என்று வாழ்த்துச் சொல்கிறார்.அமைச்சர் சேகர்பாபு சமூக நல்லிணக்கத்தோடு செயல்படுகிறார் என்பதற்கு இந்த நிகழ்ச்சியே சாட்சி.இதுதான் திராவிட ஆட்சி.இதுதான் சமூக நீதி ஆட்சி.இதைத்தான் பெரியார், அண்ணா, கருணாநிதி, அன்பழகன் ஆகியோர் எங்களுக்கு கற்றுக் கொடுத்திருக்கிறார்கள்.இந்த ஆட்சியைத்தான் முதல்வர் ஸ்டாலின் நடத்திக் கொண்டிருக்கிறார்.நானும் கிறிஸ்தவன்தான்.நான் படித்தது டோன் போஸ்கோ பள்ளியில்.கல்லூரி படித்தது லயோலா கல்லூரியில்.நான் காதலித்து திருமணம் செய்தது ஒரு கிறிஸ்தவ பெண்ணை.இதை சொல்லிக்கொள்வதில் நான் பெருமைப்படுகிறேன்.இதைக் கேட்டால் சங்கிகளுக்கு வயிறு எரியும்” என்று கூறியிருக்கிறார்.

ஸ்டாலினின் மனைவி துர்கா, கோயில் கோயிலாகச் சென்று, தாங்கள் ஹிந்துக்கள் தான் என காட்டிக்கொண்டு வரும் நிலையில், தான் ஒரு கிறிஸ்தவன் என அவரது மகன் உதயநிதி ஒப்புக்கொண்டுள்ளார் என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். இது ஒருபுறம் இருக்க, கிறிஸ்தவர்களை திருப்திப்படுத்தும் வகையில் தி.மு.க தலைவர்கள் பேசுவதும் நடந்துகொள்வதும் ஒன்றும் புதிது அல்ல. 2020ம் ஆண்டில் தனது மகள் விநாயகர் சிலையை வைத்திருக்கும் படத்தை சமூக ஊடகங்களில் பகிர்ந்த பின்னர் சர்ச்சை வெடித்தபோது, இதே உதயநிதி, தனது மகளின் விருப்பத்தின் பேரில் சிலையுடன் இருக்கும் படத்தை எடுத்ததாகவும், தனக்கும் தனது மனைவிக்கும் எந்த கடவுள் மீதும் நம்பிக்கை இல்லை என்றும் அவசர அவசரமாக விளக்கம் அளித்திருந்தார்.

கடந்த ஆண்டு, தமிழக முதல்வர் ஸ்டாலின், கிறிஸ்தவ மிஷனரிகளைப் பாராட்டி, தென்னிந்திய திருச்சபை; மாநிலத்திற்கு ஒரு வரம் என்று கூறினார்.ஜாதி இல்லாத சமுதாயத்தை உருவாக்கியதற்காக அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்த ஸ்டாலின், உங்களால்தான் தி.மு.க ஆட்சி இருக்கிறது என்றார்.தமிழகத்தில் கிறிஸ்தவர்களால்தான் தி.மு.க ஆட்சி அமைந்துள்ளது.தி.மு.க ஆட்சி கிறிஸ்துவர்களாலும், கிறிஸ்தவர்களுக்காகவும் உள்ளது.மரியாதைக்குரிய கிறிஸ்தவ பாதிரிகள் இல்லையென்றால், தமிழகம் பீகாரைப் போல் இருந்திருக்கும்.நீங்கள் பட்டினியாக இருந்து உருவாக்கிய அரசு.நீங்கள் யாரிடமும் எதிர்பார்க்க வேண்டிய அவசியமில்லை. இந்த சமூதாயத்தில் திராவிட சித்தாந்தத்தை ஊட்டி, சமூக நீதியை நிலைநாட்டி அனைவரும் கல்வி பயிலலாம் என்ற நிலையை ஏற்படுத்தியது கிறிஸ்தவ கல்வி நிலையங்கள்தான் என தமிழக சட்டப்பேரவைத் தலைவர் மு. அப்பாவு வெளிப்படையாகக் கூறுகிறார். கிறிஸ்தவ மக்களின் ஜெபத்தின் வலிமையால் இன்றைக்கு தி.மு.க ஆட்சிக்கு வந்தது என்று திருவள்ளூர் மாவட்டம் அற்புத ஜெபகோபுரம் விழாவில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சாமு நாசர் கூறினார். ஆனால் இவர்கள் எல்லாம் ஹிந்துக்களின் வாக்கு வங்கிக்காக ஆடும் நாடகங்களை எல்லாம் “தி.மு.க வெற்றி பெற்றது கிறிஸ்தவர்களும் முஸ்லிம்களும் போட்ட பிச்சை” என தனது ஒரு வார்த்தையில் போட்டுடைத்தவர் பாதிரி ஜர்ஜ் பொன்னையா.