பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் காப்புக்காடுகளைச் சுற்றியுள்ள ஒரு கி.மீ சுற்றளவில் கல் குவாரிகள் மற்றும் சுரங்கங்களை அமைக்க விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி தமிழக அரசு ஆணையிட்டுள்ளது. குவாரி உரிமையாளர்களின் நலன்களை பாதுகாப்பதற்காக சுற்றுச்சூழல் மற்றும் வனவிலங்குகளின் பாதுகாப்பை பலி கொடுக்க தமிழக அரசு தீர்மானித்திருப்பதை ஏற்க முடியாது; இது கண்டிக்கத்தக்கது. அரசின் இந்த முடிவு மிகவும் ஆபத்தானது; இயற்கையை அழிக்கக் கூடியது. காப்புக்காடுகளை ஒட்டிய பகுதிகளில் ஒரு கி.மீ சுற்றளவில் எந்த வகையான குவாரிகளையும், சுரங்கப் பணிகளையும் அமைக்கக் கூடாது என்று கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் இதே அரசு தான் ஆணை பிறப்பித்தது. காப்புக்காடுகளையொட்டிய பகுதிகளில் குவாரிகள் செயல்பட்டு வருவது அப்போது அரசுக்கு தெரியாமல் இருந்திருக்க வாய்ப்பில்லை.ஆனால், இப்போது அதற்கு முற்றிலும் எதிரான நிலைப்பாட்டை தமிழக அரசு எடுத்திருப்பது, இயற்கை வளம், சுற்றுச்சூழல் மீது அரசுக்கு ஆர்வம் இல்லையோ?எனத் தோன்றுகிறது.அதுவும் சுரங்கங்கள் அமைப்பதற்கான தடை நீக்கப்பட்டதற்காக அரசுத் தரப்பில் கூறப்பட்டிருக்கும் காரணம் மிகவும் வினோதமானது.இயற்கை வளம், சுற்றுச்சூழல், வனவிலங்குகளின் பாதுகாப்பு ஆகியவற்றை விட அரசுக்கு கிடைக்கும் வருமானமும், கல் குவாரி உரிமையாளர்களின் நலனும் தான் முக்கியமா?என்பதை அரசு விளக்க வேண்டும். காப்புக்காடுகளாக இருந்தாலும், பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக இருந்தாலும் அதைச் சுற்றியுள்ள ஒரு குறிப்பிட்ட தொலைவு, வெளிப்புற சக்திகளின் எதிர்மறையான அழுத்தங்களில் இருந்து வனத்தை காப்பதற்கான இடை மண்டலமாக அறிவிக்கப்பட வேண்டும் என்று ஐ.நா அமைப்பு வலியுறுத்துகிறது. இதே நோக்கத்தை உச்சநீதிமன்றமும் பல தீர்ப்புகளில் உறுதி செய்துள்ளது.ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 15 பேர் வனவிலங்குகள் தாக்கி உயிரிழக்கின்றனர்.தமிழக அரசின் ஆணை நடைமுறைக்கு வந்தால் மனித விலங்குகள் மோதலும், உயிரிழப்புகளும் கணிசமாக அதிகரிக்கும் ஆபத்து உள்ளது.ஒரு மாநில அரசின் முதன்மையான நோக்கம் இயற்கையையும், மக்களையும் காப்பதாகத் தான் இருக்க வேண்டும்.வளங்களை பறிகொடுத்து அரசின் வருவாயை பெருக்கவும், கல் குவாரிகளின் நலன்களை காக்கவும் எந்தத் தேவையும் இல்லை.எனவே, காப்புக்காடுகளைச் சுற்றி கல்குவாரிகள், சுரங்கங்களை அமைக்க அனுமதி வழங்கி பிறப்பிக்கப்பட்ட ஆணையை அரசு ரத்து செய்ய வேண்டும்” என்று கூறியுள்ளார்.