ஸ்ரீவில்லிபுத்தூரில் பயங்கரவாதிகள் நடமாட்டம்

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் வனப்பகுதியில் அரிய வகை வன விலங்குகள் வசித்து வருகின்றன.இந்த பகுதி தற்போது புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதையடுத்து வனத்திற்கு செல்ல பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.ஸ்ரீவில்லிபுத்தூர் வனப்பகுதியில் உள்ள செண்பகத்தோப்பில் பேச்சியம்மன் கோயில், காட்டழகர் கோயில்கள் உள்ளன.இங்கு விசேஷ நாட்களில் திரளான பக்தர்கள் கூடுவார்கள். இந்த சூழலில், கடந்த 2 வாரங்களுக்கு முன்பு செண்பகத்தோப்பு காட்டழகர் கோயில் அருகில் உள்ள வனப்பகுதியில் சாட்டிலைட் அலைபேசிகள் செயல்பாடுகள் இருப்பதற்கான அறிகுறிகள் தென்பட்டதாக சென்னை சைபர் கிரைம் கண்காணிப்பு பிரிவுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து ஸ்ரீவில்லிபுத்தூர் வனத்துறை காவலர்கள், நக்சல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் அப்குதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்தநிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர், மேகமலை புலிகள் காப்பக துணை இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஸ்ரீ”வில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சில இடங்களில் சாட்டிலைட் போன் சிக்னல்கள் கிடைத்துள்ளன. இங்கு அவ்வப்போது சமூக விரோதிகள் நடமாட்டம் இருப்பதாக உளவுத்துறை தகவல் அளித்துள்ளது.எனவே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள காட்டழகர் கோவிலுக்கு செல்லும் பக்தர்களும் ஊழியர்களும் கோயிலில் இரவு நேரங்களில் தங்க அனுமதியில்லை.கோயிலுக்கு செல்ல அனுமதி அளிக்கும் நாட்களில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை பக்தர்கள் சென்று வரலாம். இரவு நேரங்களில் காவல்துறை சோதனையின்போது கோயில் வளாகத்தில் தங்கியிருப்போர் மீது வன பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவிக்கப்பட்டு உள்ளது.