பாரதத்தின் குடியரசு துணைத் தலைவராக ஜக்தீப் தன்கர் பதவி ஏற்ற பிறகான முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடர் நேற்றுத் துவங்கியது. குளிர்கால கூட்டத் தொடரின் முதல் நாளான நேற்று குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர், மாநிலங்களவைத் தலைவராக பொறுப்பேற்றார். ஜக்தீப் தன்கருக்கு பாராட்டு தெரிவித்து பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில், “மாநிலங்களவைத் தலைவராக பொறுப்பேற்றுள்ள ஜக்தீப் தன்கருக்கு மாநிலங்களவை சார்பாகவும், நாட்டு மக்கள் சார்பாகவும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். வாழ்க்கையில் பல்வேறு போராட்டங்களை எதிர்கொண்டு நீங்கள் இந்த உயர்ந்த நிலைக்கு வந்திருக்கிறீர்கள். உங்களின் இந்த வாழ்க்கை நாட்டு மக்கள் பலருக்கும் உந்துதலாக இருக்கும். நமது குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் ஒரு விவசாயியின் மகன். அவர் படித்தது ராணுவப் பள்ளி. அந்த வகையில் அவருக்கு ராணுவ வீரர்களோடும் விவசாயிகளுடனும் நெருங்கிய தொடர்புள்ளது. தேசம் சுதந்திரம் பெற்ற 75 ஆண்டுகள் நிறைவடைந்து, அம்ருத மகோத்சவ காலம் தொடங்கியுள்ள நிலையிலும் ஜி20 நாடுகளின் தலைமைப் பொறுப்பை பாரதம் ஏற்றுள்ள நிலையிலும் நாடாளுமன்றம் கூடியுள்ளது. நமது மதிப்புக்குரிய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவர். அவருக்கு முன்பு குடியரசுத் தலைவராக இருந்த ராம்நாத் கோவிந்த் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர். தற்போதைய நமது குடியரசுத் துணைத் தலைவர் ஒரு விவசாயியின் மகன். எளிய முறையிலும், பொறுப்புணர்வுடனும் செயல்பட்டு நிலையான வளர்ச்சி இலக்குகளை அடைவதில் நமது நாடாளுமன்றம் உலகின் ஜோதியாகத் திகழும். மாநிலங்களவைதான் நாட்டின் மிகப் பெரிய பலம்” என்று பேசினார். ஜக்தீப் தன்கருக்கு வாழ்த்து தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, “அரசியல் சாசனப்படி தேசத்தின் இரண்டாவது உச்சபட்ச பொறுப்பை ஏற்றிருக்கும் உங்களுக்கு எதிர்க்கட்சிகள் சார்பில் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மாநிலங்களவை பல்வேறு யோசனைகளின் சங்கமம்” என்று தெரிவித்தார்.